தமது பெயரைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம்கோரும் நபர்களிடம் ஏமாற வேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு வேலை தேடுவோர் இவ்வாறான மோசடி செய்பவர்களுக்கு பணத்தை வழங்க வேண்டாம் என வலியுறுத்திய அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தும் தொழிலில், தமது குடும்பத்தினரோ, அமைச்சின் எந்தவொரு அதிகாரியோ ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வெளிநாடுகளில் இலாபகரமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மோசடிகளை தடுப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தீவிரமாக தலையிட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப முடியும் என்றும், அந்த நிறுவனங்களை மாத்திரம் தொடர்பு கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
நன்றி...
DAILY-CEYLON
0 Comments