மருந்துகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, பிரச்சினை இருப்பின் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
மயக்கமடையச் செய்வதற்கான மருந்தொன்று செலுத்தப்பட்டதன் பின்னர் இரண்டு பெண்கள் உயிரிழந்ததாகவும் மற்றுமொரு மருந்து வகை பயன்படுத்தப்பட்டதால், கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எழுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனை கூறினார்.
பண்டாரவளையை சேர்ந்த B.A.நந்தசேன ஒரு கண்ணின் பார்வையை முற்றாக இழந்துள்ளார். கண்ணில் ஏற்பட்டிருந்த புரையை அகற்றி, கண் வில்லையிடும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் திகதி அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். சத்திரசிகிச்சையின் பின்னர் ஏப்ரல் 6 ஆம் திகதி வீடு திரும்பிய அவரது கண்ணின் பார்வை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.
வலப்பனையை சேர்ந்த திலக் ஜயரத்னவிற்கும் நந்தசேனவிற்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்பட்டுள்ளது. அவரும் ஒரு கண்ணின் பார்வையை படிப்படியாக இழந்து வருகின்றார்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையிடம் வினவியபோது, குறித்த மருந்து பயன்படுத்தப்பட்டதை அடுத்து 18 நோயாளர்கள் பாதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அவர்களுக்கு கண்டி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்படுவதுடன், நோயாளர்களின் பார்வை தற்போது பல்வேறு மட்டங்களில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மறறும் ஹேர்னியா அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள் உயரிழந்துள்ளனர். குறித்த இருவருக்கும் அறுவை சிகிச்சைக்கு முன்னர் மயக்கமருந்து ஏற்றப்பட்டுள்ளது. இதன் பின்னர் பாதிப்பு ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், மருந்து வகைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இன்று கண்டியில் பதிலளித்தார்.
சுகாதார துறைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் அது குறித்து ஆராய்ந்து, மக்களுக்கு உண்மை நிலையை அறிவிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இது தொடர்பாக அண்மையில் பதிலளித்திருந்தது.
சர்ச்சைக்கு வித்திட்டுள்ள இரண்டு மருந்து வகைகளில், மயக்கமடையச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து அவசர சேவை கருதி அதற்கான ஏற்பாடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், கண் அறுவை சிகிச்சைகளின் பின்னர் பயன்படுத்தப்படுகின்ற மருந்து பதிவு செய்யப்பட்டு உரிய நடைமுறைக்கு அமைய இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை கூறியுள்ளது.
நன்றி...
NEWS 1ST
0 Comments