பிலிப்பைன்ஸ் அணியை 100 ஓட்டங்களால் வீழ்த்தி கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்திய தகுதிகாண் தொடரில் முதலிடத்தை பெற்ற பப்புவா நியு கினி அணி 2024 ரி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
பப்புவா நியு கினியில் நடைபெற்று வரும் அந்த தகுதிகாண் தொடரில் நேற்று (28) நடைபெற்ற பிலிப்பைன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பப்புவா அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை விளாசியது.
எனினும் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பிலிப்பைன்ஸ் அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களையே பெற்றது.
இந்த தகுதிகாண் தொடரில் பப்புவா இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது. அந்த அணி இன்று நடைபெறும் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியுடன் தொடரை பூர்த்தி செய்யவுள்ளது. இதில் நான்காவது அணியாக வனுவாட்டுவும் பங்கேற்றிருந்தது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தவுள்ள 2024 ரி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. 12 அணிகள் ஏற்கனவே தெரிவாகி உள்ள நிலையில் எஞ்சிய அணிகள் பிராந்திய ரீதியில் நடைபெறும் தகுதிகாண் தொடர் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன.
இதில் ஐரோப்பிய பிராந்திய தகுதிகாண் தொடர் மூலம் அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் ரி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றிருப்பதோடு அமெரிக்காஸ் பிராந்தியத்தில் ஒரு அணியும் ஆபிரிக்க பிராந்தியத்தில் இரு அணிகளும், ஆசிய பிராந்தியத்தில் இரு அணிகளும் எதிர்வரும் மாதங்களில் தேர்வு செய்யப்படவுள்ளன.
0 Comments