Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தலையால் முட்டி அசத்தல் கோல்.. புதிய சாதனை படைத்த ரொனால்டோ!


சவுதி அரேபியாவில் அரபு கிளப் கால்பந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அல்-நாசர் - யுஎஸ் மொனாஸ்டிர் அணிகளுக்கு இடையிலான போட்டி ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச மைதானத்தில் நடந்தது. அல்-நாசர் அணிக்காக ஆடிவரும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே புது உத்வேகத்துடன் ஆடியதைப் பார்க்க முடிந்தது.



ஆட்டத்தின் முதல் பாதியின் 42-வது நிமிடத்தில் அல்-நாசர் வீரர் தலிஸ்கா அசத்தலாக கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் அல்-நாசர் வீரர்கள் எதிரணியை கதிகலங்க வைத்தனர். ஆனால், 66-வது நிமிடத்தில் அல்-நாசரின் அலி லஜமி, கோலை தடுக்க தலையால் முட்டியதில் எதிரணிக்கு கோலாக அமைந்துவிட்டது. எனினும் நட்சத்திர வீரர் ரொனால்டோ 74-வது நிமிடத்தில் தன்னிடம் வந்த பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார். இது சர்வதேச கால்பந்து விளையாட்டில் அவர் அடித்த 839-வது கோல் ஆகும். மேலும் இது அவருக்கு தலையால் முட்டி அடிக்கும் 145-வது கோல் ஆகும். இதுவரை யாரும் இச்சாதனையை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் மற்றொரு அல்-நாசர் வீரர் அப்துலேல அல் அம்ரி, 88-வது நிமிடத்தில் கோல் கீப்பர் அசந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கோல் அடித்தார். அடுத்த 2 நிமிடங்களில் அதே அணியின் அப்துலாஜிஸ் சவுத் கோல் அடித்தார். இறுதியில் அல்-நாசர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் அல் நாசர் அணியின் முதல் வெற்றி இதுவாகும்.


முன்னதாக, அல்-நாசர் மற்றும் அல்-ஷபாப் அணிக்கு எதிரான ஆட்டம் கோல்கள் இல்லாமல் டிராவில் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டிக்குப் பிறகு வெற்றிக்காக தொடர்ந்து போராடுவோம் என ரொனால்டோ கூறியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே இந்தப் போட்டியில் வெற்றிக் கனியை பறித்துக் கொடுத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அல்-நாசர் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. அல் நாசர் அணி அடுத்ததாக வியாழன் அன்று எகிப்திய அணியான ஜமாலெக் எஸ்சி உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Post a Comment

0 Comments