Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக் கிண்ண போட்டியில் தென் ஆபிரிக்கா சாதனை மழை இலங்கைக்கு மிகக் கடினமான 429 ஓட்ட வெற்றி இலக்கு...!


குவின்டன் டி கொக், ரெசி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் குவித்த உலகக் கிண்ண கன்னி சதங்களும் அவர்களிடையே 2ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட இரட்டைச் சத இணைப்பாட்டமும் ஏய்டன் மார்க் ராம் குவித்த அதிவேக உலகக் கிண்ண சதமும் இலங்கைக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவை பலமான நிலையில் இட்டுள்ளன.

இந்த சாதனைகளுடன் உலகக் கிண்ணப் போட்டிக்கான மொத்த எண்ணிக்கையிலும் தென் ஆபிரிக்கா சாதனை படைந்தது.

டெல்லி அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 4ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 428 ஓட்டங்களைக் குவித்தது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2015 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து பெற்ற 417 ஓட்டங்களே இதற்கு முன்னைய அதிகூடிய உலகக் கிண்ண மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்றினால் இந்த மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது அமைந்தது.

நெதர்லாந்துக்கு எதிராக 2011 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்களை இழந்து பெற்ற 330 ஓட்டங்களே இதற்கு முன்னைய அருண் ஜய்ட்லி மைதான சாதனையாக இருந்தது.

மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தபோது டில்ஷான் மதுஷன்கவின் பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணித் தலைவரும் ஆரம்ப வீரருமான டெம்பா பவுமா (8) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.

இந்த ஆட்டம் இழப்பு இலங்கைக்கு தற்காலிக மகிழ்ச்சியையே கொடுத்தது.

இந் நிலையில் மற்றைய ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக், 3ஆம் இலக்க வீரர் ரசென் வென் டேர் டுசென் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை பந்துவிச்சாளர்களை சிதறடித்து சரமாரியாக ஓட்டங்களைக் குவித்தனர்.

குவின்டன் டி கொக் 83 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களைப் பெற்று உலகக் கிண்ணப் போட்டியில் தனது முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

எனினும் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டம் இழந்தார்.

குவின்டன் டி கொக்கும் ரெசி வென் டேர் டுசேயும் 2ஆவது விக்கெட்டில் 174 பந்துகளில் 204 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

டி கொக்கைத் தொடர்ந்து ரெசி வென் டேர் டுசே 101 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். அவரும் உலகக் கிண்ணப் போட்டியில் குவித்த முதலாவது சதம் இதுவாகும்.

மொத்த எண்ணிக்கை 264 ஓட்டங்களாக இருந்தபோது துனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் சதீர சமரவிக்ரமிடம் பிடிகொடுத்த வென் டேர் டுசென் 108 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

110 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார்.

அவர் ஏய்டன் மார்க் ராமுடன் 3ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அதிரடியாக ஓட்டங்களை விளாசிய ஏய்டன் மார்க்ராம் 49 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்து உலகக் கிண்ணப் போட்டியில் அதிவேக சதத்திற்கான புதிய சாதனையை நிலைநாட்டினார்.

இங்கிலாந்துக்கு எதிராக 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கெவின் ஓ'ப்றயன் 50 பந்துகளில் குவித்த 100 ஓட்டங்களே இதற்கு முன்னைய அதிவேக உலகக் கிண்ண சதமாக பதிவாகியிருந்தது.

மார்க்ராம் 54 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மதுஷன்கவின் பந்துவீச்சில் கசுன் ராஜித்தவிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அவர்களைவிட ஹென்றிச் க்ளாசென் 20 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 32 ஓட்டங்களை விளாசினார்.

டேவிட் மில்லர் 21 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 39 ஓட்டங்களுடனும் மார்க்கோ ஜென்சென் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் மதீஷ பத்திரண (95), கசுன் ராஜித்த (90), டில்ஷான் மதுஷன்க (86), துனித் வெல்லாலகே (81) ஆகிய நால்வரும் 80க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொடுத்தனர்.


Post a Comment

0 Comments