Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அல் குர்ஆன்...!


மனிதனை நேர்வழிப்படுத்தி, பூமியில் அவன் எவ்வாறு வாழ வேண்டும், அவன் மறுமையை எவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்பன குறித்து அழகிய முறையில் அல் குர்ஆன் வழிகாட்டுகிறது.

இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கும் முன்பு அரபு மொழியில் அருளப்பட்ட இக்குர்ஆன் இதே போன்ற ஒரு நூலைக் கொண்டு வாருங்கள் என்று சவால் விடுத்திருக்கிறது. அதேநேரம் இக்குர்ஆனில் எங்கேனும் ஒரு தவறையேனும் கண்டுபிடித்து விடுங்கள் என்றுகூட அறைகூவல் விடுத்திருக்கிறது. இருந்தும் இந்த சவால்கள் எவராலும் எதிர்கொள்ளப்படவில்லை. எதிர்கொள்ளவும் முடியாது. ஏனெனில் இது அல்லாஹ்வினால் வகுத்தளிக்கப்பட்ட உண்மையான இறைவேதமாகும்.

“அவர்கள் அல் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்”. (அல் குர்ஆன் 4:82) என்று அல்லாஹ்தஆலா குறிப்பிட்டிருக்கிறான்.

அதேநேரம் “நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்). (அல் குர்ஆன் 2:23)

இது இறைவேதம் என்பதை அல் குர்ஆனே (12:1) குறிப்பிட்டிருக்கிறது. மனிதனை மிக உயரிய இலட்சியத்தின் பாலும் நேரான பாதையின் பாலும் வழிநடத்துவதற்காக அல்லாஹ் இக்குர்ஆனை இறக்கியருளினான். இதனை அல்லாஹ்வே, “இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்” (அல் குர்ஆன் 41:2) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

“நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கின்றார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் முஹம்மத் நபிக்கு அல்லாஹ் இறக்கியருளிய அதே முறையில் அதன் வசனங்களை இன்றும் மக்கள் ஓதுகின்றார்கள். செவிமடுக்கின்றார்கள். மனப்பாடம் செய்கிறார்கள். புரிந்துகொள்கின்றார்கள்”. 
(திருக்குர்ஆன் 41:41).

அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற அல் குர்ஆன் உங்களிடம் வந்துள்ளது”. (அல் குர்ஆன் 5:15)

“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் (அல் குர்ஆன்) மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்”. 
(அல் குர்ஆன் 5:16).

“உண்மையில் இக்குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது. மேலும், இதனை ஏற்றுக்கொண்டு நற்செயல் செய்பவர்களுக்குத் திண்ணமாகப் பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி அறிவிக்கிறது”. 
(அல் குர்ஆன் 17:9)

இக்குர்ஆனுக்கு என்று நோக்கங்களும் இலக்குகளும் உள்ளன. அதேபோன்று சரியான கொள்கை, இறைத்தன்மை, தூதுத்துவம், நற்கூலி, மனிதன் குறித்த யதார்த்தம், அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கண்ணியம், அவனது உரிமைகள் குறித்த முக்கியத்துவம், அதிலும் குறிப்பாக பலவீனமானவர்களின் உரிமைகள் குறித்தெல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறது அல் குர்ஆன்.

இறைவனுடன் மனிதன் தொடர்பில் இருக்க வேண்டும், அல்லாஹ்வை மட்டுமே அவன் வணங்க வேண்டும், அனைத்து விவகாரங்களிலும் அவனையே அஞ்ச வேண்டும் என்றும் இக்குர்ஆன் வலியுறுத்தி ஊக்குவிக்கிறது. உளத்தூய்மை குறித்தும் இக்குர்ஆன் எடுத்தியம்பியுள்ளது. உள்ளம் தூய்மை பெற்றுவிட்டால் சமூகம் தூய்மை பெறும் என்றும், உள்ளம் இருளடைந்தால் சமூகம் பாதிப்புறும் என்றும் இக்குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது.

அத்தோடு சமூகத்தின் கருவாக இருக்கும் குடும்ப அமைப்பு குறித்தும் குடும்பத்தின் தூணாக விளங்கும் பெண்ணிடம் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கும் இக்குர்ஆன், சீர்திருத்தம் செய்யும் சமூக உருவாக்கம் குறித்தும் வலியுறுத்துகிறது. மனித குலத்திற்கான அமானிதம் அந்த சமூகத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சாட்சியாளர்களாகத் திகழ வேண்டும். காரணம், ஏனைய மக்களுக்கு பயன் தருவதற்காகவும் அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும் மட்டுமே இவர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கொருவர் அறிமுகமாகுங்கள், வெறுக்காதீர்கள், சகிப்புத்தன்மையைக் கடைபிடியுங்கள், `இனவாதம் வேண்டாம், நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள், தீமையிலும், பகைமையிலும் பரஸ்பரம் உதவாதீர்கள் என்றும் மனித சமூகத்திற்கு இக்குர்ஆன் அழைப்பு விடுத்துள்ளது.

மனப்பாடம் செய்தல், ஓதுதல், செவிமடுத்தல், வசனங்களை சிந்தித்தல், யோசித்தல், விளங்குதல், விளக்குதல் போன்றவற்றின் மூலம் இக்குர்ஆனுடன் சிறந்த முறையில் நடந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

அதன் காரணத்தினால் குர்ஆன் கூறும் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அது இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளைப் பெற்றுத்தரும்.

- மின்ஸார் இப்றாஹீம் - 

Post a Comment

0 Comments