உற்சாகம் மற்றும் உத்வேகம் ஆகியவற்றுடன் கடந்த வருடம் முழுவதும் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்திய பெட் கமின்ஸ், தனது அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.
பெட் கமின்ஸின் தலைமையின் கீழ் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, தொடர்ந்து ஆஷஸ் தொடரைத் தக்கவைத்துக்கொண்டது.
அத்துடன் நின்றுவிடாமல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் தோல்வி அடையாத அணியாக சம்பியனாகி 6ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது.
2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெட் கமின்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியா அணி உச்சத்தை எட்டியது. அவரது மிகத் திறமையான ஆளுமை, பொறுமை, கட்டுப்பாடு, சிறந்த பண்பு என்பன ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தனது சக வீரர் ட்ரவிஸ் ஹெட், இந்திய வீரர்களான விராத் கோஹ்லி, ரவிந்த்ர ஜடேஜா ஆகியோரும் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் பெட் கமின்ஸின் ஆட்டத் திறன், ஆளுமை, தலமைத்துவம் அனைத்தும் உயர்ந்திருந்தது.
கடந்த வருடம் 24 போட்டிகளில் 422 ஓட்டங்ளைப் பெற்ற அவர் 59 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
அதிசிறந்த கிரிக்கெட் பருவ காலத்தைக் கொண்டிருந்த பெட் கமின்ஸ் அனைவரினதும் பாராட்டுதல்களை வென்றெடுத்தார்.
இந்தியாவுக்கு எதிராக கடந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற போடர் - காவஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பெட் கமனின்ஸின் அவுஸ்திரேலியாவுக்கு சிறப்பாக அமையவில்லை.
ஆனால், அதன் பின்னர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியனான அவுஸ்திரேலியா, தொடர்ந்து ஆஷஸ் தொடரை தக்கவைத்துக்கொண்டது.
வருட பிற்பகுதியில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளிலும் அற்புதமாக விளையாடிய அவுஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வெற்றிகொண்டு உலக சம்பியனானது. அந்த இறுதிப் போட்டியில் பெட் கமின்ஸ் அணியை வழிநடத்திய விதம், பிரயோகித்த வியூகங்கள், பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம் என்பன சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தன.
ஆஷஸ் தொடரிலும் உலகக் கிண்ண கிரிக்கெட்டிலும் இக்கட்டான வேளைகளில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை வெற்றபெறச் செய்தவர் பெட் கமின்ஸ்.
வருட இறுதியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்த பெட் கமின்ஸ் அந்தத் தொடரைக் கைப்பற்றி வருடத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்திருந்தார்.
0 Comments