றைவன் மனிதர்களின் படைப்பின் தொடக்கத்திலே கல்வி என்னும் ஒளியை ஏற்றினான். அதுவே கல்வியின் தொடக்கமாகும். அன்று பிரகாசித்த ஒளி இந்த உலகம் உள்ளளவும் தொடர்ந்து மனித வாழ்வுக்கு ஒளியூட்டிக் கொண்டே இருக்கும்.
இறைவன் திருமறையில் கூறுகிறான் “பின்னர் அல்லாஹ் எல்லாப் பொருள்களின் பெயர்களையும் ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களின் முன் வைத்து “(ஒரு பிரதிநிதியை நியமித்தால் பூமியில் ஒழுங்கமைப்பு சீர்குலையும் எனும்) உங்கள் கருத்து சரியானால், இவற்றின் பெயர்களைச் சற்று சொல்லுங்கள்’ எனக் கூறினான்’
(அல் குர்ஆன் 2:31)
அகிலத்தின் இறைவனிடமிருந்து மனித குலத்திற்கு அருளப்பட்ட வேதத்தின் முதல் வசனமே “இக்ரா ஓதுவீராக’ என்பதுதான். “(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!’ (அல் குர்ஆன் 96:1)
அல்லாஹ்வின் அளவற்ற அருளில் முக்கியமான முதலாவது அருளாகக் கல்வி தான் உள்ளது. கல்வியை நமது உயிர் மூச்சாகக் கருதிக் காக்க வேண்டும். மனித வாழ்க்கையில் உயர்வான எண்ணங்களும் உன்னதமான குணங்களும் தோன்ற வேண்டுமாயின் கல்வி அவசியம். தன்னை யார் என்று உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்குக் கல்வி ஒரு முக்கிய ஆயுதமாக விளங்குகிறது.
இறைவன் ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்து அதன் மூலம் சமூகத்தைச் சீர்படுத்தக் கட்டளையிட்டுள்ளான். இறைவன் தன் திருமறையில் “தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்’ (அல் குர்ஆன் 27:15) எனக் கூறுகிறான்.
கல்வி மனிதனின் அறிவுக்கண்களைத் திறப்பதற்கான திறவுகோலாக உள்ளது. கல்வியறிவில் சிறந்தவர்கள்தான் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவார்கள். கல்வியின் தேடல் நாம் ஆழ்கடலில் இறங்கி எவ்வாறு விலை உயர்ந்த முத்தை எடுக்க முயல்கிறோமோ அதே போல் நமது வளர்ச்சிக்காகக் கல்வி என்னும் பொக்கிஷத்தைத் தேடுவதை நம் அடிப்படைக் கடமையாகக் கருத வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், “கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமை’
(ஆதாரம்: இப்னுமாஜா 228).
கல்வியைத் தேடும் இந்தப் பயணத்தில் ஆண், பெண் இருவரும் சமமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் பெண் என்பவள் குடும்பத்திலும், சமூகத்திலும் மிக முக்கிய பங்காகத் திகழ்கிறாள்.
நபி(ஸல்) அவர்கள் “கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்’ எனக் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி) அன்னை ஆயிஷா(ரலி) கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கியதால் மார்க்கம் குறித்த அடிப்படைச் சட்டங்கள், ஷரீஅத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும், அதில் சரியான ஆலோசனைகளைச் சொல்லக் கூடியவர்களாகவும் விளங்கினார்கள். அவர்கள் மூலமாக நமக்குக் கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை 2210 ஆகும். நபி(ஸல்) அவர்கள் தன் மனைவி கல்வியறிவில் சிறந்து விளங்குவதைத் தடை செய்யவில்லை. இறைவன் தனது செய்களைத் தான் தேர்ந்தெடுத்த ஓர் அடியார் மூலம் சமூகத்திற்குத் தெரிவிக்கிறான். இறைத்தூதர்களும் கற்றலைத் தேடிப் பயணித்தவர்கள் தான். நபி மூஸா (அலை) அவர்கள் தனது அறிவை வளர்த்துக் கொள்ள நீண்ட பயணத்தை மேற்கொண்டு கிள்ர் (அலை) அவர்களிடம் கற்றுள்ளார். மூஸா (அலை) அவரிடம் “தங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் நல்லறிவை நீங்கள் எனக்குக் கற்றுத் தரும் பொருட்டு நான் உங்களுடன் இருக்கலாமா? என்று கேட்டார்’
(அல் குர்ஆன் 18:66)
மேலும் கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக அறிவில் சிறந்த ஸஹாபாக்கள் ஒரு மாத தூரம் பயணம் சென்றிருக்கிறார்கள். ஹதீஸ் கலையைத் தொகுத்த இமாம்களின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அவர்களும் நபிமொழிகளைத் தொகுப்பதற்குப் பல நாடுகள் பயணம் செய்திருப்பதை அறிய முடியும். இவ்வாறு ஒவ்வொரு இறைத்தூதர்களும், நல்லடியார்களும் கற்றலின் அவசியத்தை உணர்ந்து அதற்காக முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். நாமும் எந்த வயது வரம்பின்றி நமது கற்றலை மேற்கொள்ள வேண்டும். சாக்குப் போக்கு சொல்லாமல் தொடர்ந்து நம் இறுதி மூச்சு வரை கல்வியின் பாதையில் பயணிக்க வேண்டும்.
இறைவன் திருமறையில் கற்றோரின் தகுதிகளை உயர்த்துவேன் எனக் கூறுகிறான். “எவர்கள் ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான் (அல் குர்ஆன் 58:11).
கற்ற மனிதரால் தான் நேர்வழி எது என்பதைப் பிரித்தறிய முடியும். கல்வி அறிவைப் பெற்றவரின் வாழ்க்கை இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டதாக மாறிவிடும். அவர் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவராக மாறிவிடுவார். இறைவன் கூறுகிறான் “அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள் தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.’
(அல் குர்ஆன் 39:9)
“கற்றது கையளவு கல்லாதது உலகளவு’. நம்மால் முழுமையாக அனைத்தையும் கற்க முடியாது. நாம் கற்றுக்கொண்டிருக்கும் போது நம்முடைய கல்வியை அதிகப்படுத்துவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதற்காக அல்லாஹ் “என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை (கல்வியறிவை) வழங்குவாயாக’ (அல் குர்ஆன் 20:114) எனும் பிரார்த்தனையை கற்றுக் கொடுத்திருக்கிறான். இந்தக் கல்வி என்னும் பொக்கிஷத்தை நாமும் கற்று நமது சந்ததியையும் கல்வி ஞானத்தை கற்கும், கல்வியைத் தேடிப் பயணிக்கும் சமுதாயமாக மாற்றுவதற்குக் கடுமையாக உழைப்போம்.
✍︎ மின்ஸார் இப்றாஹீம்… ✍︎
0 Comments