Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பொங்கல் திரைப்படங்கள் ஒரு பார்வை...!


ஒவ்வொரு வருடமும் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழாவின் போது தமிழர்களின் திருவிழா கொண்டாட்ட கலாச்சாரத்தில் , திரைப்படங்களை அன்றைய திகதியில் பட மாளிகைக்கு சென்று பார்வையிடுவது என்பதும் ஒன்று. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறப்பு பார்வையைத் தொடர்ந்து காண்போம்.

வழக்கமாக கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவின் போது உச்ச நட்சத்திரங்களின் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக உச்ச நட்சத்திர அந்தஸ்துக்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் திரைப்படங்கள் வெளியாகிறது. அதில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்', விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்மஸ்', அருண் விஜய் நடிக்கும் 'மிஷன் சாப்டர் 1' ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகிறது.

கேப்டன் மில்லர்

அஜித் நடிப்பில் 'விஸ்வாசம்' எனும் திரைப்படத்தை தயாரித்து, பொங்கலுக்கு வெளியிட்டு மாபெரும் வெற்றியைக் கண்ட சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. விஸ்வாசம் திரைப்படத்தை போல் 'கேப்டன் மில்லர்' திரைப்படமும் வெற்றி பெறும் என்று இந்நிறுவனம் பொங்கல் விடுமுறையில் இத்திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இதற்கு முன் வெளியான 'ராக்கி', 'சாணி காயிதம்' ஆகிய இரண்டு படத்தை இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் நாயக பிம்பம் அதீத வன்முறையை கையாண்டிருப்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார். அதனால் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திலும் அதீத வன்முறையை எதிர்பார்க்கலாம். மேலும் இந்தத் திரைப்படத்தில் 'ஸ்லிம் சிவாஜி' தனுஷ் நடித்திருப்பதால்.. இந்த ஒற்றை மந்திரம் ரசிகர்களை படமாளிகைக்கு அழைத்து வரும். இதனை உணர்ந்தே தனுஷ் இப்படத்தில் ஐந்து வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.‌ இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நேர்நிலையான அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கதாநாயகியாக நடித்திருக்கும் இளம் நடிகை பிரியங்கா அருள் மோகனுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் முன்னுரிமை இருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

அயலான்

கடந்த ஆண்டு வரை நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடுத்தர குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பும், ஆதரவும் இருந்தது. ஆனால் அவர் தமிழ் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளரின் மனைவியுடன் திருமணம் கடந்த உறவை கொண்டிருந்தார் என்ற செய்தி வெளியான பிறகு, அவர் மீது குடும்ப பார்வையாளர்களிடம் அதிருப்தியும், வருத்தமும் உருவாகி இருக்கிறது. மேலும் இது குறித்து சிவகார்த்திகேயன் எந்த தன்னிலை விளக்கமும் அளிக்காமல், தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதால் ஒரு தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் அவர் இழந்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'அயலான்' திரைப்படம், பல்வேறு தடைகளை கடந்து பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர். ரவிக்குமார் இதற்கு முன் 'இன்று நேற்று நாளை' எனும் வெற்றி படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் ஏலியன் எனும் வேற்று கிரக வாசியினை திரையில் தோன்ற வைத்து, அறிவியல் சார்ந்த புனைவு கதை ஒன்றை அவர் படைத்திருக்கிறார். இதற்கு கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பேரு உதவி புரிந்திருக்கிறது. அத்துடன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையும் ஒன்றிணைந்திருப்பதால், ஆறு வயது முதல் 60 வயது வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக இப்படம் திகழ்கிறது. இதனால் திரையுலக வணிகர்கள் இந்த திரைப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெறும் என அவதானித்திருக்கிறார்கள்.

மெரி கிறிஸ்மஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான இந்தி திரைப்படம். விஜய் சேதுபதியின் தமிழ் திரையுலக சந்தை மதிப்பை கவனத்தில் கொண்டு இத்திரைப்படம் தமிழிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் தமிழராக இருந்தாலும் மும்பையின் தங்கி தொடர்ந்து இந்தி படங்களை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான 'பட்லாபூர்', 'அந்தாதூன்' ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பொலிவூட் நடிகை காத்ரீனா கைஃப் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் அழுத்தமான கதையம்சத்துடன் படத்தை இயக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இப்படத்தின் பின்னணியில் இருப்பதால் இப்படத்தின் மீதும் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே விஜய் சேதுபதி தனி கதையின் நாயகனாக நடித்த பல திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது. இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் திரைப்படங்களான 'விக்ரம்', 'விடுதலை பார்ட் 1','ஜவான்' ஆகிய படங்கள் வசூலின் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இவர் தனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்மஸ்' வெற்றி பெறுமா? பெறாதா? என்ற ரெண்டுகெட்டான் நிலைதான் இதுவரை நீடிக்கிறது. இதனால் திரையுலக வணிகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு குறைவுதான்.

மிஷன் சாப்டர் 1

அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மிஷன் சாப்டர் 1'. இயக்குநர் விஜய் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முழு நீள எக்சன் என்டர்டெய்னர். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடத்தில் ஓரளவு வரவேற்பினை பெற்றிருக்கிறது. குறிப்பாக முன்னோட்டம் எக்சன் காட்சிகளால் நிரம்பி வழிவதால் எக்சன் திரைப்படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக லண்டன் கதைக்களம் என்பதாலும், லண்டனில் உள்ள சிறைகளில் சண்டை காட்சி பரபரப்பாக அமைக்கப்பட்டிருப்பதாலும், ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. இப்படம் வெளியான பிறகு ரசிகர்களை கவர்ந்திருந்தால் அவர்களின் வாய்மொழி பரப்புரையால் பாரிய வெற்றியை இத்திரைப்படம் பெறக்கூடும்.

இதை தவிர்த்து தெலுங்கு முன்னணி நடிகரான தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான 'ஹனு-மான்' எனும் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இத்திரைப்படத்திற்கும் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஃபேண்டஸி திரைப்படங்களை உருவாக்குவதில் தெலுங்கு திரையுலக இயக்குநர்களுக்கு தனித்துவமான திறமை இருப்பதால்.. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஹனு-மான் எனும் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இத்திரைப்படத்தின் கதை சுப்பர் ஹீரோ பாணியில் உருவாக்கப்பட்டிருப்பதாலும், ஹனுமானின் சக்தி சாதாரண பக்தர் ஒருவருக்கு கிடைத்தால்... 

அவர் எப்படி சாகசங்களை திரையில் நிகழ்த்துவார்? என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாலும்.. இத்திரைப்படமும் பார்வையாளர்களை கண்களை அகல விரித்து வியப்பில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கலாம். இப்படமும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களின் வாய்மொழி பரப்புரையால் பாரிய வெற்றியை பெறக்கூடும்.

Post a Comment

0 Comments