தஞ்சாவூரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று (14) பொங்கல் விழாவை தமிழக பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை முனியாண்டவர் கோயில் வளாகத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை, சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். விழாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாலைஅணிவித்து, வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் மாட்டு வண்டிகளில் ஏறி கிராமத்தை வலம் வந்தனர். அப்போது,பெண்கள் வீடுகளின் முன்பு வண்ணக் கோலமிட்டு, வெளிநாட்டினரை வரவேற்றனர்.
கோயில் வளாகத்தில் வெளிநாட்டினர் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, கபடி, பானை உடைத்தல், கயிறுஇழுத்தல், இளவட்டக் கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டன.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கோலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், கூடை முடைதல், ஜோதிடம், பானை செய்தல் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
விழாவில், நெதர்லாந்து, போலந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் செய்திருந்தார்.
0 Comments