Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு மேலும் 152 ஓட்டங்கள் தேவை...!


இங்கிலாந்துக்கு எதிராக ரஞ்சி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுவதற்கு இந்தியாவுக்கு மேலும் 152 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.



இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் 145 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா, வெற்றிக்கு தேவைப்பட்ட 192 ஓட்டங்களில் 40 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி எடுத்து பலமான நிலையில் இருக்கிறது.



ரொஹித் ஷர்மா 24 ஓட்டங்களுடனும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 46 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இந்தியா, மூன்றாம் நாள் ஆட்டடத்தில் தனது சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு இங்கிலாந்தை திக்குமுக்காட வைத்தது.



இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப பந்துவீச்சாளராக பயன்படுத்தப்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் தனது 35ஆவது 5 விக்கெட் குவியலை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவுசெய்தார்.

மூன்றாவது சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றைய விக்கெட்டை ரவீந்த்ர ஜடேஜா கைப்பற்றினார்.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் ஸக் குரோவ்லி (60) ஜொனி பெயாஸ்டோவ் (30) ஆகிய இருவரே திறமையாக துடுப்பெடுத்தாடினர்.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இந்தியா, கடைசி 3 விக்கெட்களுக்கு மேலும் 88 ஓட்டங்களை சேர்த்து 307 ஓட்டங்களை மொத்தமாக பெற்றது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காமல் இருந்த த்ருவ் ஜுரெல், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 76 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

குல்தீப் யாதவ் 28 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் ஆகாஷ் தீப்புடன் 9ஆவது விக்கெட்டில் மேலும் 40 ஓட்டங்களை த்ருவ் ஜுரெல் பகிர்ந்தார்.

த்ருவ் ஜுரெல் 149 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் ஷொயெப் பஷிர் 119 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் டொம் ஹாட்லி 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேம்ஸ் அண்டசன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 353 (ஜோ ரூட் 122 ஆ.இ., ஒலி ரொபின்சன் 58, பென் ஃபோக்ஸ் 47, ஸக் குரோவ்லி 42, ஜொனி பெயாஸ்டோ 38, ரவிந்த்ர ஜடேஜா 67 - 4 விக்., ஆகாஷ் தீப் 83 - 3 விக்., மொஹமத் சிராஜ் 78 - 2 விக்.)

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 307 (த்ருவ் ஜுரெல் 90, யஷஸ்வி ஜய்ஸ்வால் 78, ஷுப்மான் கில் 38, ஷொயெப் பஷிர் 119 - 5 விக்., டொம் ஹாட்லி 68 - 3 விக், ஜேம்ஸ் அண்டசன் 48 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 145 (ஸக் குரோவ்லி 60, ஜொனி பெயாஸ்டோ 30, ரவிச்சந்திரன் அஷ்வின் 51 - 5 விக், குல்தீப் யாதவ் 22 - 4 விக்.)

இந்தியா (வெற்றி இலக்கு 192) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்கள் (ரோஹித் ஷர்மா 24 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 16)

Post a Comment

0 Comments