கலஹா லுல் கந்துர தோட்டத்திலுள்ள குடியிருப்பு அறையொன்றில் தற்காலிகமாக வசிப்பதற்காக வந்த இளம் தம்பதியினர், சுமார் 5 1/2 மாதக் குழந்தையொன்றை வீட்டில் தனியாக கைவிட்டு வெளிநாடு சென்றுள்ள
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு வாகரையை வசிப்பிடமாக கொண்டதாகக் கூறப்படும் இவ்விருவரும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தோட்டத்தில் உள்ள குடியிருப்பு அறையில் தற்காலிகமாக குடியேறினர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மூதாட்டி உண்மையில் இவர்களது உறவினரா? என்ற சந்தேகம் நிலவுவதாகவும், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளமையாலேயே சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதாட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்துதான், குழந்தையை அங்கேயே விட்டு, வெளிநாடு செல்லும் நோக்கில் தற்காலிகமாக வீட்டுக்கு இவர்கள் வந்திருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகத்திடம் இளம் தம்பதியினர் வழங்கிய தகவலின்படி அவர்கள் இருவரும் 21 வயதுடையவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் திகதி அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவரை தொடர்புகொண்டு, தாம் வெளிநாடு செல்வதாகவும், அறையில் இருக்கும் குழந்தையை யாராவது பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் தெரிவித்த பின்னர் தோட்டத்தின் குடும்ப நலப் பணியாளரால் குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. பாலூட்டும் வசதிகள் வைத்தியசாலையில் இல்லாத காரணத்தினால் குழந்தை பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கலஹா தெல்தோட்டை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கபில அத்தபத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு மேல் குழந்தையின் தாயும் தந்தைக்கும் தொலைபேசி அழைப்பு எடுத்த போதும் தொலைபேசி செயலிழக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் உண்மையில் வெளிநாடு சென்றுள்ளனரா? அல்லது வெளிநாடு செல்வதாகக் கூறி நாட்டுக்குள்ளேயே தலைமறைவாகியுள்ளனரா? என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.a
0 Comments