உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்று நோய்.
ஆண்களையும் பெண்களையும் தாக்க கூடிய புற்றுநோயை, வரும் முன் தடுக்கும் மருத்துவ முறைகள் குறித்து முன்னணி உலக நாடுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று.
இங்கிலாந்தில், வருடாந்தம் சராசரியாக 47,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுமார் 3 இலட்சம் பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான மிதமான மற்றும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பல வருடங்களாக பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அனஸ்ட்ரசோல் (anastrozole) எனும் மருந்தை தற்போது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்த இங்கிலாந்தின் மருந்து மற்றும் உடலாரோக்கிய பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (Medicines And Healthcare Products Regulatory Agency) உரிமம் வழங்கியுள்ளது.
புற்று நோய் சிகிச்சை மருத்துவர்களும், பெண்களும் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அனஸ்ட்ரசோல், காப்புரிமை தேவை இல்லாத மருந்து என்பதால் குறைவான விலையில் இதனை இனி பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்க இயலும். அனஸ்ட்ரசோல் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பதில் அதிக திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
விலை குறைவாக உள்ளதால் இதுவரை லட்சக்கணக்கில் ஏற்பட்டிருந்த நோய்சிகிச்சைக்கான செலவினங்களை இது குறைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அனஸ்ட்ரசோல் மருந்திற்கு நோய் தடுப்பு சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்க்கு இதுநாள் வரை இது சிறப்பாக சிகிச்சை மருந்தாக இருந்து வந்தது. இனிமேல் பெண்களுக்கு இந்த நோய் வருவதை தடுக்கவும் இதனை பயன்படுத்த முடியும்” என இது குறித்து இங்கிலாந்தின் சுகாதார அமைச்சர் வில் குவின்ஸ் தெரிவித்துள்ளார்.
0 Comments