Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

காசா உயிரிழப்பு 31,000 ஐ கடந்தது - பேச்சுவார்த்தை இழுபறியுடன் நீடிப்பு...!- காசாவில் தற்காலிக துறைமுகம் அமைக்க அமெரிக்க கப்பல் பயணம் -

காசாவில் 156 ஆவது நாளாகவும் நேற்றும் (10) இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் அங்கு உயிரிழப்பு 31 ஆயிரத்தை தாண்டியுள்ளதோடு போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சிகளும் இழுபறியுடன் நீடித்து வருகிறது.

அங்கு மனிதாபிமான நெருக்கடியும் மோசமடைந்திருக்கும் சூழலில் காசா காசா கரையில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான உபகரணங்களை ஏற்றிய அமெரிக்க இராணுவ கப்பல் ஒன்று மத்திய கிழக்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

உதவிக் கப்பலான ஜெனரல் பிரான்க் எஸ். பெசோன், விர்ஜினிய மாநிலத்தில் உள்ள இராணுவத் தளம் ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்துள்ளது. காசாவுக்கு கடல் வழியாக உதவிகளை விநியோகிக்க மிதக்கும் துறைமுகம் ஒன்றை கட்டப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த நிலையிலேயே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அங்கு பஞ்சம் ஒன்று ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என்று ஐ.நா எச்சரித்துள்ளது. இதில் உதவிகள் செல்லாது அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு காசாவில் பச்சிளம் குழந்தை ஒன்றும் இளம் பெண் ஒருவரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்திருக்கும் நிலையில் அங்கு பட்டினிச்சாவு 25 ஆக உயர்ந்துள்ளது.

காசாவுக்கு தரைவழியாக உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து வரும் சூழலில் இந்தப் பகுதிக்கு தரை மற்றும் வான் வழியாக உதவிகளை விநியோகிப்பது அபாயகரமாக மாறியுள்ளது. உதவி வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கொள்ளைகள் இடம்பெற்ற நிலையில் உலக உணவுத் திட்டம் உதவி விநியோகத்தை நிறுத்தியுள்ளது. வானில் இருந்து போட்ட உதவிகளில் பாராசூட் சரியாக இயங்காத நிலையில் உதவிப் போதிகள் மேலே விழுந்து கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து பேர் உயிரிழந்ததாக காசாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 1,000 அமெரிக்கத் துருப்புகளின் உதவியோடு காசாவில் தற்காலிக முகாம் ஒன்றை கட்டுவதற்கு 60 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்றும் காசா கரைக்கு அந்தத் துருப்புகள் கால் வைக்காது என்றும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கு அத்தனை காலம் காத்திருக்க முடியாது என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம் சுமார் 200 தொன் உதவிகளை ஏற்றிய கப்பல் ஒன்று சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க அனுமதிக்காக காத்துள்ளது. கடல்வழியாக காசாவுக்கு உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிவிப்பை அடுத்து தயார்படுத்தப்பட்ட இந்தக் கப்பல் இன்று (11) பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயின் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இந்தக் கப்பலில் அமெரிக்க தொண்டு நிறுவனம் வழங்கிய உதவிகள் அடங்குகின்றன. எனினும் அமெரிக்காவின் தற்காலிக துறைமுகம் இன்னும் தயாராகாத சூழலில் இந்த கப்பல் துறைமுகம் ஒன்று இல்லாத காசாவில் எவ்வாறு கரையொதுங்கும் என்ற கேள்வி நீடித்து வருகிறது.

தொடர்ந்து நம்பிக்கை

மறுபுறம் முஸ்லிம்களின் ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் சாத்தியமில்லாத நிலையை எட்டி இருக்கும் சூழலில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது. மொசாட் தலைவர் டேவிட் பார்னி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸை சந்தித்திருந்தார். இந்நிலையில் பர்ன்ஸ் தொடர்ந்தும் பிராந்தியத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டுள்ளார்.

‘இடைவெளிகளை குறைத்து உடன்படிக்கைகளை எட்டும் முயற்சியாக மத்தியஸ்தர்களுடன் எப்போதும் தொடர்புகொண்டு மற்றும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறோம்’ என்று மொசாட் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வார இறுதி பேச்சுவார்த்தைக்காக மீண்டும் ஒரு முறை தமது குழுவின் பிரதிநிதிகள் கெய்ரோ செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று ஹமாஸ் வட்டாரம் ஒன்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜனவரி தொடக்கம் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கின்றன. கடைசியாக கடந்த நவம்பரில் ஒரு வார போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோது ஹமாஸ் பிடியில் இருந்த 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு இஸ்ரேல் சிறையில் இருக்கும் அதன் மூன்று மடங்கான பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருந்தது.

எனினும் போரை முடிவுக்குக் கொண்டவருவது அல்லது காசாவில் இருந்து தமது துருப்புகளை வாபஸ் பெறும் உத்தரவாதத்தை வழங்க இஸ்ரேல் மறுத்து வருவதாக ஹமாஸ் குற்றம்சாட்டுகிறது.

மறுபுறம் ரமழானில் பிராந்தியத்தில் வன்முறையை தூண்டுவதற்கு ஹமாஸ் முயற்சிப்பதாக மொசாட் குற்றம்சாட்டியுள்ளது. ஹமாஸை தோற்கடித்தால் மாத்திரமே போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து வரும் பைடன் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த சனிக்கிழமை அளித்த பேட்டியில், ரமழானுக்கு முன் உடன்படிக்கை ஒன்றை எட்டுவது இன்னும் சாத்தியம் என்று கூறியபோதும் அது எவ்வாறு என்பதை குறிப்பிடவில்லை.

இதில் காசாவில் தொடரும் சண்டையில் இஸ்ரேலியப் பிரதமரின் அணுகுமுறையை பைடன் சாடியுள்ளார். ‘இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு இஸ்ரேலுக்கு உதவவில்லை… இஸ்ரேலை காயப்படுத்துகிறார்,’ என்றார்.

இஸ்ரேலைத் தற்காக்கும் உரிமை நெதன்யாகுவுக்கு இருந்தாலும் ஹமாஸுக்கு எதிரான சண்டையில் அப்பாவிகள் உயிரிழப்பதை அவர் கருத்தில் கொள்ளவேண்டும் என்று பைடன் கூறினார். என்றாலும் இஸ்ரேலை தொடர்ந்தும் அமெரிக்கா தற்காக்கும் என்றும் பைடன் அந்தப் பேட்டியில் வலியுறுத்தினார். இந்த பேட்டியின்போது முரண்பாடான கருத்துகளை வெளியிட்ட பைடன், காசாவின் தெற்கு நகரான ரபா மீது இஸ்ரேல் படையெடுத்தால் அது நெதன்யாவுக்கான ‘சிவப்பு எச்சரிக்கையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டபோது, உடன் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இங்கு சிவப்பு எச்சரிக்கைகள் இல்லை என்றும் இஸ்ரேலை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் ரமழான் மாதத்தை ஒட்டி ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே வெளியிட்ட அறிவிப்பில், பலஸ்தீனர்கள் தமது சுதந்திரத்தை மீட்கும் வரை தொடந்து போராடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் கடந்த சனிக்கிழமையும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. சில ஆர்ப்பட்டக்காரர்கள் நெடுஞ்சாலை ஒன்றை மறித்த நிலையில் பொலிஸாரால் அவர்கள் அகற்றப்பட்டனர். காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நடத்திய பேரணி ஒன்றும் அங்கு இடம்பெற்றது. பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

‘வலியும் கோபமம் எனது இரத்தத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது’ என்று காசாவில் இருந்து கடந்த நவம்பரில் விடுவிக்கப்பட்ட பதின்ம வயதான அகம் கோல்ட்ஸ்டைன் குறிப்பிட்டார்.

தொடரும் படுகொலைகள்

கடந்த ஆறு மாதங்களாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போர்து 31,045 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 72,654 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கொல்லப்பட்ட சுமார் 72 வீதமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

‘கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் காசா பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு எதிராக நிகழ்த்திய ஏழு பழுகொலை சம்பவங்களில் 85 பேர் உயிர்த் தியாகம் செய்திருப்பதோடு 130 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று சுகாதார அமைச்சு டெலிகிராம் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டது.

இந்த உயிரிழப்புகளில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த 25 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதில் நுஸைரத் அகதி முகாமில் உள்ள இடம்பெயர்ந்தவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பெண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஸீனா என்ற ஐந்து மாத பெண் குழந்தையும் ஒமர் என்ற ஆறு வயது சிறுவனும் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் தெற்கு லெபனானில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் சனிக்கிழமை இரவு நடத்திய வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் ஐவர் கொல்லப்பட்டு மேலும் ஒன்பது பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments