ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், எதற்கும் தயாராகவே இருப்பதாக ஈரானும் கூறியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடக்கும் நிலையில், இப்போது மற்றொரு பதற்றமான சூழல் உருவாகி வருகிறது. இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் சமாளித்துவிட்டது. பெரியளவில் தேசம் இல்லை என்ற போதிலும் இது புவிசார் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ஈரான் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவ தளபதி கூறியிருந்தார். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதற்கு நொடிகளில் பதிலளிப்போம் என்ற ஈரான், தேவைப்பட்டால் இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களைக் கூட பயன்படுத்துவோம் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
ஈரான் தாக்குதல் தொடர்பாக இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளார். 24 மணி நேரத்திற்குள் பெஞ்சமின் நெதன்யாகு நடத்தும் இரண்டாவது கூட்டம் இதுவாகும். இதுவரை பதில் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் எந்தவொரு முடிவையும் எடுக்காத நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்யும் என்று நெதன்யாகு அமெரிக்க உயர் அதிகாரி ஸ்டீவ் ஸ்காலிஸுடனான தொலைப்பேசி உரையாடலில் கூறியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஈரானும் கூட இஸ்ரேல் என்ன செய்தாலும் அதற்குப் பதிலடி தர தயாராகவே இருக்கிறது.
இது தொடர்பாக ஈரான் தளபதி கூறுகையில், “நாங்கள் எங்களால் என்னவெல்லாம் முடியும் என்பது குறித்து ஆய்வு செய்கிறோம். பல ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுவது ஒரு பதிலடி இருக்கும். சரியான நேரத்தில் மிக பெரியளவில் பதிலடி கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.
நேற்று தான் நெதன்யாகு தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில் ட்ரோனுக்கு பதிலடி கொடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்றது. இருப்பினும், அதில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அறிய முடிகிறது.
இருப்பினும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் இஸ்ரேல் நிலைமையை மோசமாக்கக்கூடாது என்றே கூறியுள்ளனர். இஸ்ரேல் ஈரான் இடையே போரை விரும்பவில்லை என்று கூறியுள்ள அமெரிக்கா, அந்த பிராந்தியத்தில் அமைதியையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் உயர் தளபதிகள் உட்பட பலர் கொல்லப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இஸ்ரேல் தான் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகவே ஈரான் பதிலடி தாக்குதலைச் சனிக்கிழமை இரவு நடத்தி இருக்கிறது.
0 Comments