கடந்த 2023 IPL ஒருநாள் உலகக் கிண்ண போட்டித்தொடரில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை உலகம் முழுவதும் 40 கோடி பேர் பார்த்தனர் என்று ICC புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுகிறார்கள். இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் டிக்கெட் விற்பனையும் படுஜோராக அதிகரித்து ஒரு டிக்கெட் விலை 1,000 டாலரில் இருந்து 4,000 டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,000-ரூ.3.34 லட்சம்) அதிகரித்துள்ளதாக ஆங்கில நாளேடுகள் தெரிவிக்கின்றன. விளம்பர வருவாயும் ICC க்கு அதிகரித்துள்ளது.
ஆனால், இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தின் மூலம் வருமானத்தை பன்மடங்கு உயர்த்தி கொள்ளும் ICC இந்த முறை ஆடுகளத்தில் கோட்டை விட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
நியூயோக்கில் இன்று (09) நடக்கும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் A பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்தில் ஆடுகளத்தை எந்த அணி எவ்வாறு பயன்படுத்தப்போவது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஆடுகளத்தில் (Nassau County International Cricket Stadium) இதுவரை இரு போட்டிகள் நடந்துள்ள நிலையில் அந்த மைதானத்தில் அதிகபட்சமே 96 ஓட்டங்கள் தான். ஆடுகளத்தின் சமனற்ற பகுதி, முறையான பராமரிப்பின்மை, தரத்தை பராமரிக்காமை ஆகியவற்றால் துடுப்பாட்டக்கார்களை வேகப்பந்து வீச்சாளர்கள் கதிகலங்க வைக்கிறார்கள்.
இந்த விக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசினால், எந்த இடத்தில் பந்து பிட்ச் ஆனால், எப்படிவரும், எப்படி எகிறும் என்பது தெரியாமல் கடந்த இரு போட்டிகளிலும் துடுப்பாட்டக்கார்கள் திணறினர். அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் துடுப்பாட்டக்கார்களின் உடலையும் இந்த ஆடுகளம் ரணமாக்கியுள்ளது. ஆதலால், இந்த ஆடுகளத்தை எவ்வாறு இரு அணிகளும் தங்களுக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப் போகிறது என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.
T20 உலகக் கிண்ண வரலாற்றைப் பொருத்தவரை இதுவரை நடந்த உலகக் கிண்ண போட்டிகளில் கடந்த 2021 உலகக் கிண்ணம் தவிர அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது. T20 உலகக் கிண்ணம் என்றாலே இந்தியாவின் ஆதிக்கம் தான் மேலோங்கி இருக்கிறது.
இந்திய அணி எப்படி தயாராகியுள்ளது?
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா முதல் போட்டியிலேயே மோசமான ஆடுகளத்தில் அரைசதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். தோள்பட்டையில் பந்து தாக்கியதால் ரிட்டயர்ஹர்ட் முறையில் ரோஹித் சர்மா வெளியேறினார். விராட் கோலி சொற்ப ஓட்டங்களில் ஏமாற்றினாலும் IPL தொடரில் அவர் ஃபார்ம் மிரட்டலாக இருந்தது.
இந்த முறை 3ஆவது வீரராக களமிறங்கும் புதிய பொறுப்பு ரிஷப்பந்துக்கு வழங்கப்பட்டது. முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக ரிஷப் பந்த் சிறப்பாகவே பேட் செய்தார். ஆதலால் 3-வது இடத்தில் தொடர்ந்து களமிறக்கப்படலாம். 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ் IPL தொடரிலும் பெரிதாக ஃபார்மில் இல்லை, இந்த உலகக் கிண்ணத்திலும் முதல் போட்டியில் ஏமாற்றியதால், அவரது துடுப்பாட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படோல் என நடுவரிசையை வலுப்படுத்த பேட்டர்கள் உள்ளனர்.
நியூயோர்க் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானது என்பதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் அதிகமான வாய்ப்பு தரப்படலாம். ஆதலால், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்த ஆட்டத்திலும் விளையாடுவார்கள். முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களான சஹல், குல்தீப் இருவருக்கும் வாய்ப்புக் கிடைப்பது கடினம் தான்.
பந்துவீச்சைப் பொருத்தவரை நியூயோர்க் ஆடுகளத்தில் பும்ராவின் பந்துவீச்சு கூர்மையான அம்புபோல் பேட்டர்களை நோக்கி கடந்த ஆட்டத்தில் இறங்கியது. 4 ஓவர்கள் வீசிய பும்ரா 7 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அதேபோல அர்ஷ்தீப் சிங் அரவுண்ட் ஸ்டிக்கில் இருந்து பந்து வீசும் போது, பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது. வலது கை பேட்டர்களுக்கு அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு பெரிய தலைவலியாக மாறும். முதல் ஆட்டத்தில் சிராஜ் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என நம்பலாம்.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளத்தின் தன்மையை விரைவாகப் புரிந்து கொண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்றார்போல் பந்துவீசினர். இதனால்தான் 96 ஓட்டங்களுக்கு சுருட்ட முடிந்தது. இந்த மைதானத்தில் மொத்தம் 4 விக்கெட்டுகள் உள்ளன.
இதில் முதல் விக்கெட்டில் தென் ஆபிரிக்கா-இலங்கை ஆட்டமும், 4ஆவது எண் விக்கெட்டில் இந்தியா-அயர்லாந்து ஆட்டமும் நடந்தது. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எந்த விக்கெட்டில் நடத்தப்படுகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் நிலைமை என்ன?
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அனுபவம் இல்லாத அமெரிக்க அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு வலு சேர்க்க இந்திய அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்த பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனை பயிற்சியாளராக நியமித்தும் இந்த தோல்வியைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க அணிக்கு எதிராக 150 ஓ;டங்களுக்கு மேல் ஸ்கோர் செய்தும் அதை டிபெண்ட் செய்யாத நிலையில் அந்த அணியின் பந்துவீச்சு தரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் நியூயோர்க்கில் நாளை நடக்கும் புதிய ஆடுகளத்தில் பாகிஸ்தான் இந்திய அணியை எதிர்கொள்கிறது.
நியூயோர்க்கில் இரு அணிகளும் மோத இருக்கும் ஆடுகளம் புதிதானது மட்டுமல்ல, இதுவரை இரு அணிகளுமே விளையாடாததாதும் கூட. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுவதால், பாகிஸ்தானின் ஷாகின்ஷா அப்ரிதி, ஹேரிஸ் ராஃப், நசீம் ஷா, அமீர் பந்துவீச்சு பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் புதிய பந்தில் அப்ரிதியின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு கடும் சவாலாக இருக்கலாம்.
துடுப்பாட்டத்தில் பாபர் ஆசம், ஃபக்கர் ஜமான், ரிஸ்வான், இப்திகார் அகமது, சதாப் கான், இமாத் வாசிம் என பெரிய படையே இருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிராக பெரிதாக இவர்கள் பேட் செய்யவில்லை. சர்வதேச அளவில் சிறந்த பேட்டராக புகழப்படும் பாபர் ஆஸம் முதல் ஆட்டத்தில் ஓட்டங்கள் சேர்க்கத் திணறினார்.
இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாக ஆடக்கூடிய ரிஸ்வான் ஆட்டம் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. நியூயோர்க் மைதானத்தில் ஏற்கெனவே இந்திய அணி விளையாடி இருப்பது கூடுதல் சாதகம். ஆனால், பாகிஸ்தான் முதல்முறையாக ஆட இருப்பதால், மைதானத்தை நன்கு ஆய்வு செய்து, ஆலோசித்து களமிறங்கினால் தான் வெல்ல முடியும்.
ஏற்கெனவே பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்துவிட்டதால், இந்த ஆட்டத்தில் வென்றால்தான் அடுத்துவரும் 2 அணிகளுக்கு எதிரான ஆட்டங்களிலும் எளிதாக வென்று சூப்பர்-8 சுற்றுக்குச் செல்ல முடியும். ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால், கடைசி இரு ஆட்டங்களிலும் பெரிய அளவில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்காக காத்திருக்க வேண்டும். ஆதலால், இந்த ஆட்டம் பாகிஸ்தானுக்கு முக்கியமானதாகும்.
ஆயுதமாகும் ஆடுகளம்
நியூயோர்க்கில் நாசாவ் கவுண்டி ஆடுகளத்தில் (Nassau County International Cricket Stadium) அமைக்கப்பட்ட ஆடுகளம் ‘ட்ராப்-இன் பிட்ச்’. அதாவது வெளியே இருந்து செயற்கையாக ஆடுகளம் உருவாக்கப்பட்டு இங்கு வந்து பதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ட்ராப் இன் பிட்ச் கொண்டு வந்து அமைத்தாலே அது ‘செட்’ ஆக அதாவது முறையான ஆடுகளமாக மாற சிறிது காலம் தேவை. பல போட்டிகள் தொடர்ந்து நடத்திய பின்பு தான் இந்த ஆடுகளத்தை சர்வதேச போட்டிக்கு பயன்படுத்த முடியும்.
இந்த ஆடுகளத்தை உருவாக்கவே அடிலெய்ட் மைதானத்தின் தலைமை ஆடுகள வடிவமைப்பாளரை ICC பணிக்கு அமர்த்தியுள்ளது. அனைத்துப் பணிகளும் முடிந்து வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டிக்கு முதல் நாள்தான் ICC-யிடம் மைதானம் ஒப்படைக்கப்பட்டதாக கிரிக்இன்போ தளம் தெரிவிக்கிறது. போட்டி நடக்கும் நியூயோர்க்கில் நன்றாக வெயில் அடித்து, காலநிலை ஏதுவாக இருந்தால், ஆடுகளம் நன்றாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், குளிர்ச்சியாகவும், பனிப்பொழிவு மிக்கதாகவும், மழை பெய்து வருவதால் ஆடுகளம் இன்னும் முழுமையாக ‘செட்’ ஆகவில்லை. அதாவது சர்வதேசப் போட்டிக்கு ஏதுவாக மாறவில்லை.
சர்வதேசப் போட்டிக்குத் தகுதியாக மாறாத ஆடுகளத்தில் எவ்வாறு ICC உலகக் கிண்ணத்தில் 11 ஆட்டங்களை நடத்த முடிவு செய்தது என்பது புதிராக இருக்கிறது.
மைதானத்தில் உள்ள முதல் எண் கொண்ட ஆடுகளத்தில் தென் ஆபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம்தான் முதல் ஆட்டமாகும். பரிசோதனை முயற்சியில் இலங்கை அணி பலியானது. 4-வது எண் கொண்ட ஆடுகளத்தில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அயர்லாந்து 96 ஓட்டங்களில் சுருண்டது.
இதனால்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் போது பவுன்ஸர்கள் திடீரென எகிறுவதும், ஸ்விங் ஆவதும் அதிகரித்துள்ளது. பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக மாறிவிட்டதால்தான் இரு போட்டிகளிலும் குறைந்த ரன்களே அடிக்க முடிந்தது. இரு போட்டிகளிலும் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 96 ஓட்டங்களை கடக்கவில்லை.
3ஆவது எண் ஆடுகளம் பயன்படுத்தப்படுமா?
ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர் குறைவாக ஸ்விங் செய்ய முயன்றால் கூட பந்து அதிகமாக ஸ்விங் ஆகி வைடாக மாறிவிடுகிறது. இதனால் கட்டுப்பாட்டுடன், மிகுந்த துல்லியமாக, லைன் லென்த்தில் பந்துவீச வேண்டியுள்ளது. கடந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், அயர்லாந்து வீரர் ஹேரி டெக்டர் ஆகியோர் பந்தால் காயம் அடைந்தனர்.
நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளில் வலிமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் வரிந்து கட்டி பந்துவீசும் போது, துடுப்பாட்டக்காரர்கள் நிலைமைதான் பரிதாபமாகும். நாளை நடக்கும் ஆட்டத்தில் 2 மற்றும் 3ஆவது எண் ஆடுகளம் பயன்படுத்தப்படுமா அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் ஆட்டம் நடக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆடுகளம் முழுமையாக தயாராகாத நிலையில் நாளை நடக்கும் ஆட்டம் பெரும்பாலும் குறைந்த ஸ்கோர் கொண்ட ஆட்டமாக அமையவே அதிக வாயப்புள்ளது. ஆதலால் டாஸ் நாளைய ஆட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஆடுகளம் குறித்த ICC வெளியிட்ட அறிக்கையில் கூட “இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்த ஆடுகளத்தில் அடிக்கடி போட்டிகள் நடத்தப்படவில்லை. உலகத் தரமாக ஆடுகளத்தை மாற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்துவரும் ஆட்டங்களுக்கு சிறந்த ஆடுகளத்தை வழங்க முயற்சிப்போம்,” எனத் தெரிவித்துள்ளது.
ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே ஆட்டத்தை வெல்வதற்கு ஆடுகளம் முக்கியமான ஆயுதமாக இருக்கும்.
0 Comments