கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை சந்தித்து பேசினேன். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாள் அவகாசம் கோரினேன். ஆனால், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் நீதி கிடைக்க விரும்பவில்லை. தாமதம் செய்யவே விரும்புகின்றனர். வழக்கை விசாரிக்க தொடங்கி 16 நாட்கள் ஆகிறது. நீதி எங்கே?
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, சட்டப்பேரவையில் 10 நாட்களில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால், ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து போராடுவோம்.
இந்த விவகாரத்தில் நீதி வேண்டும். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நீதி வேண்டும் என்ற இலக்கில் இருந்து பாஜகவினர் விலகிச் செல்கின்றனர். எனவேதான், அவர்கள் முழுஅடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். மேற்கு வங்கத்தின் புகழை கெடுக்க சதி செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments