Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

2025 வரவு - செலவு திட்டத்துக்கான செலவின மதிப்பீடுகள் திறைசேறியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனதா? முழு விபரம்…!


வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்காமல் 2025 இல் செலவுகளை மேற்கொள்ள முடியாது. எனவே 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அதற்கான செலவின மதிப்பீடுகளை அமைச்சரவை திறைசேரிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பம்பலப்பிட்டியவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை மாத்திரமே வரவு - செலவு திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் ஜனவரியில் ஓய்வூதியம், அஸ்வசும உள்ளிட்ட மானியங்களை வழங்க முடியாது.

எனவே தற்போது வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான செலவின மதிப்பீடுகளை அமைச்சரவை திறைசேரிக்கு அறிவித்துள்ளது. மாதாந்தம் 25,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை உள்ளடக்கி அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 24 மற்றும் 50 சதவீதமாக அதிகரித்து குறைந்தபட்ச சம்பளத்தை 55 000 ரூபாவாக வழங்குவதற்கான யோசனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் பிரகாரம், வருமானம் ஈட்டும் போது செலுத்தப்படும் வரி தொடர்பில் அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை இன்று முன்மொழிந்தது. உத்தேச பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாகக் காணப்பட்ட போதிலும், கடந்த காலாண்டுகளில் 5 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி வேகத்தை திறம்பட பேண முடிந்தது.

எனவே அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக வருமான வரியைக் குறைப்பது தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை ஏற்று இந்த வரி குறைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. திறைசேரி வட்டாரத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவ்வாண்டு கடன் மீள் செலுத்தல் உள்ளிட்ட மொத்த செலவுகள் சுமார் 8800 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி மற்றும் வரி அற்ற வருமானமாக 5000 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறெனில் 3800 வரவு - செலவு திட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனை கடன் பெற வேண்டியுள்ளது. அதில் ஒரு பகுதி உள்நாட்டிலும் மற்றைய பகுதி வெளிநாட்டிலும் பெறப்படும். அந்த வகையில் வெளிநாட்டில் கடன் வாங்கும் போது நிதி ஒதுக்கீடுகளைப் பெறவும், சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவான கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments