Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஹிஸ்புல்லா – இஸ்ரேல் இடையே பரஸ்பர தாக்குதல்கள் உக்கிரம்...!



இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நேற்று (22) பரஸ்பரம் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றதோடு இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு லெபனானில் உக்கிர தாக்குதல்களை நடத்திய நிலையில் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலின் வடக்குப் பகுதி மீது ரொக்கெட் குண்டுகளை வீசியது.

காசா போரை ஒட்டி இரு தரப்புகளும் சுமார் கடந்த ஓர் ஆண்டாக தினசரி பரஸ்பர தாக்குதல்களை நடத்தியபோதும் தற்போது மோதல் முன்னர் இல்லாத அளவுக்கு தீவிரம் அடைந்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் ஆயிரக்கணக்கான ரொக்கெட் ஏவு கருவிகள் உட்பட கடந்த சனிக்கிழமை 290 இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியதோடு ஈரான் ஆதரவு அமைப்பின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதாக அது கூறியுள்ளது.



இஸ்ரேலின் வடக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்றுகூடல்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

லெபனான் மற்றும் ஈராக்கில் இருந்து ரொக்கெட் குண்டுகள் இரவு முழுவதும் விழுந்த நிலையில் இஸ்ரேலின் சைரன் அபாய ஒலி கேட்ட வண்ணம் இருந்தன. எனினும் பெரும்பாலான ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பினால் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.

இதில் பல கட்டடங்கள் நேரடியாக தாக்கப்பட்டது அல்லது ஏவுகணை பாகங்கள் விழுந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் சேவை பிரிவினால் சிகிச்சை பெற்றுள்ளனர். எனினும் எவரும் மோசமான காயங்களுக்கு உள்ளாகவில்லை என்று இஸ்ரேலிய ஊடகங்கள் கூறின.

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலிய ரமட் டேவிட் விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்து பல டஜன் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா நேற்று டெலிகிராம் தளத்தில் பதிவிட்டது.

இரு தரப்புக்கும் இடையே மோதல் ஆரம்பித்தது தொடக்கம் ரமாட் டேவிட் மீது இஸ்ரேலுக்குள் அழமாக தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லாவல் முடிந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் வெடிக்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் இஸ்ரேல் மீது நேற்றுக் காலை தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஈராக் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதி ஒன்றில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை (20) நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் கொல்லப்பட்டதோடு குறைந்தது 37 பேர் பலியான சம்பவத்தை அடுத்தே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் மூத்த தலைவர் இப்ராஹிம் ஆகில் மற்றும் மற்றொரு தளபதியான அஹமது வஹ்பி உட்பட தமது 16 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறியது.

கடந்த ஓர் ஆண்டாக நீடிக்கும் பதற்ற சூழலில் லெபனானில் நடத்தப்பட்ட அதிக உயிரிழப்புக் கொண்ட தாக்குதலாக இது இருந்தது.

இந்தத் தாக்குதலில் சனநெரிசல் மிக்க புறநகர் பகுதியில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டதோடு அதற்கு அருகில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றும் சேதமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள் மற்றும் ஏழு பெண்கள் இருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் அடுத்தடுத்த நாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பு உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர் மற்றும் வோக்கி டோக்கி சாதனங்கள் வெடித்த சம்பவங்களில் 39 பேர் கொல்லப்பட்டு 3000க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். இது இஸ்ரேலிய உளவுப் பிரிவான மோசாட்டின் செயல் என பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

மோதல் விரிவடைவது தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் கவலையை வெளியிட்டபோதும் முன்னணி ஹிஸ்புல்லா தலைவர் ஒருவர் கொல்லப்பட்டது அந்தக் குழுவுக்கு நீதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஹிஸ்புல்லாவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.

மோதல் தீவிரம் அடைந்த நிலையில் லெபனான் பிரதமர் நஜிப் முகதி, நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.

காசாவில் ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கு இஸ்ரேல் இணங்கும் வரை அதன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக ஹிஸ்புல்லா கூறி வருகிறது.

எனினும் காசா போரை ஒட்டி லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் நீடிக்கும் பதற்றம் முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கிடைக்கப்பெறும் வர்த்தக விமானங்களைப் பயன்படுத்தி லெபனானில் இருந்து வெளியேறும்படி பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அங்குள்ள அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அண்டை நாடான ஜேர்தானும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு இது போன்ற அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

லெபனானுடனான வடக்கு எல்லையில் அவதானம் செலுத்தும் வகையில் “புதிய கட்ட போர் ஒன்றில்” இஸ்ரேல் பிரவேசித்திருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments