Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

‘பாலியல் புகாருக்கு ஆளாகும் நடிகருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்’ ...!











பாலியல் புகார் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பாதுகாப்பு கமிட்டி கொண்டு வந்துள்ள புதிய தீர்மானங்களில், மூன்றாவது தீர்மானம் முரணாக அமைந்துள்தாக சர்ச்சை எழுந்துள்ளது.

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. புகார்களின் அடிப்படையில் நடிகர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலையாள சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகிலும் இதேபோன்று விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் திரை துறையில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பு கமிட்டி என்பது விசாகா கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, “1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

2.பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.

3.பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


4.பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ - மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

5.பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

6.யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

7.மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்” என்பது உள்ளிட்ட 7 புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்நிலையில் இந்த முதல் மற்றும் 3வது தீர்மானங்களுக்கு இடையே முரன்பாடு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது பாலியல் புகார்கள் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கதிற்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மூன்றாவது தீர்மானத்தில் பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் நபர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது எனவும், நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையாகும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த நடிகரை யாருக்கும் தெரியாமல் அழைத்து எச்சரிக்கை விடுவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகை குஷ்பு, “தமிழகத்தில் இதுவரை எந்த நடிகையும் பாலியல் தொடர்பாக புகார் அளிக்கவில்லை. நடிகர்களுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கை எந்த மாதிரியான எச்சரிக்கை என பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Post a Comment

0 Comments