மீண்டும் இந்தியாவிலிருந்து தரமற்ற ஊசி மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிவில் உரிமைகள் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (30) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,
மருத்துவ விநியோகப் பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவிலிருந்து மீண்டும் தரம் குறைந்த ஊசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்படும் மருந்துகள உரிய முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்படுவதில்லை.
உரிய ஒழுங்குபடுத்தல் இன்றியும், முறையான ஆய்வு கூட பரிசோதனைகள் இன்றியும், உரிய பதிவுகள் இன்றியும் மருந்துகள் நாட்டுக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இவை சில அரசியல்வாதிகளினதும், உயர் அதிகாரிகளினதும் பணிப்பின் பெயரில் கொண்டுவரப்படுகின்றன.
அவ்வாறு கொண்டுவரும் மருந்துகளைப் பயன்படுத்துவதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்புக்கூறுவது?
மருந்துகளுக்காகச் செலவிடப்பட்டுள்ள பணத்துக்கு யார் பொறுப்புக் கூறுவது?
இதன்காரணமாக நாங்கள் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளோம்.
இந்தியாவிலிருந்து முறையற்ற விதத்தில் ஊசிமருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைதான பின்னரும் இம்மியூனோக்ளோபுளின் ஊசிமருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனவே இந்த விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு தமது சங்கம் முறைப்பாடளித்துள்ளதாக சிவில் உரிமைகள் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
0 Comments