Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் : இந்தியா- பாகிஸ்தான் முறுகல்...!


2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது.

2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்தத் தொடருக்கான போட்டிகள் நடைபெறும் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று நகரங்களை தாண்டி, ஸ்கார்டு, முர்ரீ, ஹன்சா மற்றும் முஸாஃபராபாத் ஆகிய நகரங்களுக்கும் கோப்பையை எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் ஸ்கார்டு மற்றும் முஸாஃபராபாத் ஆகிய இரண்டு நகரங்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளது.

இதை எதிர்த்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பேசி இருந்தார். உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் அந்தத் திட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தியது.

இதனை அடுத்து சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை இந்த தொடர் நடைபெற உள்ள கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வர முடியாது என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு அனுமதி வழங்காததால் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அனுப்ப முடியாது என்ற முடிவை பிசிசிஐ அறிவித்து இருந்தது.

அதனால் இந்தியா ஆடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு முதற்கட்டமாக அந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் வெடித்தது. அதையும் பிசிசிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தி இருக்கிறது.

Post a Comment

0 Comments