அம்பாறை காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற அனர்த்த சம்பவத்தில் காணாமல் போன உழவு இயந்திரத்தின் சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதன் போது உழவு இயந்திரத்தை செலுத்தி சென்ற சாரதியின் உறவினர்கள் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது பொலிஸார் குறித்த முறைப்பாட்டை சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினத்தன்று குறித்த சாரதி விபத்தின் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தனது ஊடக அறிக்கையில் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுவரை மீட்கப்பட்ட 07 சடலங்களில் குறித்த சாரதியின் சடலம் இன்று உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த உழவு இயந்திர சாரதி சடலமாக மீட்கப்பட்டமை அங்கு பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.
மீட்கப்பட்ட உழவு இயந்திர சாரதியின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தின்போது, அதில் 14 பேர் பயணித்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, காணாமல் போயிருந்தவர்களில் ஐவர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதுடன், நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்தநிலையில் குறித்த உழவு வண்டியின் சாரதியும் அவருடன் பயணித்த அவரது நண்பர் ஒருவரும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மற்றுமொரு சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments