
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவிகளைத் தற்காலிகமாக நிறுத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் சர்வதேச மேம்பாட்டு திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. அந்தவகையில் பாகிஸ்தானில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள், தொல்லியல் ஆய்வு இடங்கள், அருங்காட்சியகங்கள், உள்ளூர் மொழிகள் மற்றும் கைவினைத் தொழில்களைப் பாதுகாத்தல் , கலாசார பாதுகாப்பை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களுக்கான நிதியைப் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவர் நிதி மூலம் அமெரிக்கா வழங்கி வந்தது.
இந்த நிதியை தற்காலிகமாக இடை நிறுத்தவும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை மறு ஆய்வு செய்யவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் எரிசக்தித் துறை தொடர்பான 5 திட்டங்களுக்கும் அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. ட்ரம்பினுடைய உத்தரவால், இந்த நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் பொருளாதார வளர்ச்சிக்கான 4 திட்டங்களும், சமூக பாதுகாப்பு திட்டமும், பாதிப்பைச் சந்தித்துள்ளன.
இது தவிர விவசாயம் ,சுகாதாரம், வாழ்வாதரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மற்றும் கல்வித் திட்டங்களும் பாதிப்படைந்துள்ளன.
அமெரிக்காவின் வெளிநாட்டு நிதியுதவிகள் மறு ஆய்வு செய்யப்படும் என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதன்படி பாகிஸ்தானுக்கான நிதியுதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
0 Comments