
காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் மேலும் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் மீது யெமனில் இருந்து நேற்று (27) நடத்தப்பட்ட இரு பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக மத்திய இஸ்ரேல் மற்றும் ஜெரூசலம் பகுதியில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் இடைவிடாது நீடிக்கும் நிலையில் நேற்று (27) அதிகாலை வடக்கு காசாவின் பெயித் லஹியா பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
இதேநேரம் கான் யூனிஸின் வடக்காக வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் மேலும் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதோடு ரபாவின் மேற்குப் பகுதி மற்றும் மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமின் வடக்காக பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இதன்போது வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஹமாஸ் பேச்சாளர் அப்தல் லதீப் கனுவா கொல்லப்பட்டுள்ளார்.
ஜபலியா நகரில் அவர் தங்கி இருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானம் நேற்று அதிகாலை குண்டு வீசி இருப்பதாக ஷஹப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் ஹமாஸ் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு குறிப்பாக ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர்கள் பலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 82 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘கொல்லப்பட்ட கணிசமானோரின் உடல்கள் தொடர்ந்து இடிபாடுகளிலும் வீதிகளிலும் இருக்கும் நிலையில் அம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு பணியாளர்களால் அவற்றை மீட்க முடியாதுள்ளது’ என்று அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2023 ஒக்டோபரில் ஆரம்பமான காசா மீதான இஸ்ரேலின் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 50,208 ஆக அதிகரித்துள்ளது. தவிர 113,910 போர் காயமடைந்துள்ளனர்.
இதில் இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்தை அடுத்து கடந்த மார்ச் 18 ஆம் திகதி காசா மீது இஸ்ரேல் மீண்டும் உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 855 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 1,869 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை யெமனில் இருந்து வீசப்பட்ட இரு ஏவுணைகளை இஸ்ரேல் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னர் இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (27) கூறியது. இதன்போது ஜெரூசலம் உட்பட இஸ்ரேலின் பல பகுதிகளிலும் வான் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கும் சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
யெமனின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளியிட்டு இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. காசா மீதான தாக்குதலை நிறுத்தும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்று அந்தக் கிளர்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹூத்திக்களுக்கு எதிராக அமெரிக்கா கடந்த மார்ச் 15 ஆம் திகதி தொடக்கம் யெமன் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தையும் மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்துவதோடு அண்மையில் சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக லெபனானின் தெற்கு நகரான யஹ்முர் அல் ஷகிப்பில் கார் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு லெபானின் தர்கையா பகுதியில் ஹிஸ்புல்லா தளபதியையும் கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி அமுலுக்கு வந்த முதல் கட்ட போர் நிறுத்தத்தில் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு பகரமாக நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும் கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளன.
0 Comments