Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



முதியோர் கொடுப்பனவு ரூ. 5,000 ஆக அதிகரிப்பு...! முழு விபரம்



2025 ஏப்ரல் தொடக்கம் நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்.!

இதயநோய்க்கான 6,000 டெனெக்ரிப்லெஸ் 40mg ஊசிமருந்து குப்பிகள் கொள்வனவு முதியோருக்காக வழங்கப்படும் உதவுதொகையை ரூ. 3,000 இருந்து ரூ. 5,000 வரை அதிகரித்தல் மற்றும் குறித்த தீர்மானங்களை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதுடன், 2415/66 மற்றும் 2024.12.21 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தின் I ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘நிலையற்றவர்கள்’ சமூகப் பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலப்பகுதியை 2025.04.30 வரை நீடித்தல்.

• குறித்த உதவி வழங்கும் திட்டத்தின் II ஆவது அட்டவணையின் உள்ளடக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகை மற்றும் சிறுநீரக நோய்க்கான உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகையை ரூ. 7,500 இருந்து ரூ. 10,000 வரை அதிகரித்தல் மற்றும் முதியோருக்காக வழங்கப்படும் உதவுதொகையை ரூ. 3,000 இருந்து ரூ. 5,000 வரை அதிகரித்தல் மற்றும் குறித்த தீர்மானங்களை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்.

• II ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவுதொகையைப் பெறுகின்ற இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு மேற்குறிப்பிட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய, கொடுப்பனவுக் காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல்.

• 2025 ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையற்றவர்கள் சமூகப் பிரிவினருக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டாலும், குறித்த குடும்பங்களிலுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கான காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல்.

• புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்களின் விண்ணப்பங்கள் உயர்ந்தபட்ச வரையறையின் கீழ், உள்வாங்கி தகுதி பெறுகின்றவர்களுக்கு குறித்த கொடுப்பனவை 2025.12.31 வரை வழங்கல்.

2. ஜப்பான் அரசின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையின் ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் தீயணைப்புப் பிரிவுகளை நிறுவுதல் மற்றும் உபகரணங்களை மேம்படுத்தல்.
இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் இயங்கி வருகின்ற ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் நவீன தீயணைப்புக் கருவிகளுடன் கூடிய உள்ளக தீயணைப்புப் பிரிவொன்றை நிறுவுவதன் மூலம் முதலீட்டாளர்களின் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புகின்ற வகையிலும், துரித பதிலளிப்புக்கள் மூலம் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை சொத்துக்களைப் பாதுகாத்து பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டுமெனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக ஜப்பான் அரசின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 300 மில்லியன் யென் (கிட்டத்தட்ட 590 மில்லியன் இலங்கை ரூபாய்கள்) நன்கொடையாக கட்டுநாயக்க, பியகம, சீதாவக்க மற்றும் வத்துப்பிட்டிவல ஏற்றுமதி செயலாக்க வலயங்களுக்கு 4000 லீற்றல் கொள்ளளவுடைய நான்கு (04) தீயணைப்பு ஊர்திகள் மற்றும் பன்னிரண்டு (12) உபகரணத் தொகுதிகளை வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

இக்கருத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் அமுலாக்கல் இலங்கை முதலீட்டுச் சபையால் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்களத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களின் பிரகாரம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கிணங்க, உத்தேச நன்கொடை அளிப்பைப் பெற்றுக் கொள்வதற்கான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. அரசுக்குச் சொந்தமான வணிக ரீதியற்ற நிறுவனங்கள் தொடர்பான மீளாய்வு அறிக்கையைச் சமர்ப்பித்தல்
அரசுக்குச் சொந்தமான வணிக ரீதியற்ற நிறுவனங்களை மீளாய்வு செய்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு 160 நிறுவனங்களை மீளாய்வு செய்துள்ளதுடன், அவற்றில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 36 உயர் கல்வி நிறுவனங்கள் மீளாய்வு செய்வதற்காக துறைசார் நிபுணர்களுடன் கூடிய உபகுழுவொன்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் தவிர்ந்த எஞ்சியுள்ள 124 நிறுவனங்களை 09 வகுதிகளின் கீழ் வகைப்படுத்தி குழு விதந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, குறித்த விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. தேசிய இறக்குமதி வரிக் கொள்கைக் குழுவுக்கான குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference)
ஆசியப் பிராந்தியத்தில் போட்டித்தன்மையான சந்தையை உருவாக்குவதற்காகவும், இலங்கையை முதலீட்டு இடமாக மாற்றம் செய்வதை நோக்காகக் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மற்றும் தாங்கிக் கொள்ளக்கூடிய வரி முறையை இலக்காகக் கொண்டு தேசிய இறக்குமதி வரிக் கொள்கையை அறிமுகப்படுத்தல் மற்றும் அமுல்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும்,குறித்த பணிக்கு தேசிய இறக்குமதி வரிக் கொள்கைக் குழுவொன்றை நியமித்தல் அல்லது குறித்த குழுவுக்கான பணிப்பொறுக்கள் விதிக்கப்படவில்லை. தேசிய இறக்குமதி வரிக் கொள்கைக் குழுவுக்கான குறிப்பு விதிமுறைகள் (ToR) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிப்பொறுப்பு குறிப்பு விதிமுறைகளுக்கு திறைசேரியின் பிரதி செயலாளரின் தலைமையில் தேசிய இறக்குமதி வரிக் கொள்கைக் குழுவை நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு உர நிதி மானியத்தை வழங்கல்
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது :
• 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 25,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு
• காலபோகக் கூட்டங்களில் தீர்மானிக்கப்படுகின்ற வயல் காணிகளில் மேற்கொள்ளப்படும் வேறு போகப் பயிர்களுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு

6. அதிகவலு கதிரியக்க சக்தியுடன் கூடிய உயரிய தரத்துடன் கூடிய கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் விநியோக கருத்திட்டத்தின் IIஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல்
புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் 14 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை 02 கட்டங்களின் கீழ் விநியோகிப்பதற்கு 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் Elekta கம்பனிக்கும், சுகாதார அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் 04 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களும், கண்டி தேசிய மருத்துவமனைக்கு 02 இயந்திரங்களும், காலி தேசிய வைத்தியசாலைக்கு 01 இயந்திரமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 01 இயந்திரமும், யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தள வைத்தியசாலைக்கு 01 இயந்திரமுமாக மொத்தம் 09 இயந்திரங்கள் தற்போது தாபிக்கப்பட்டுள்ளன. இலங்கை புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவ நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளை கருத்தில் கொண்டு, கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் இரத்தினபுரி, பதுளை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட 05 வைத்தியசாலைகளுக்கு உயர் தொழிநுட்பத்துடன் கூடிய infinity நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை நிறுவுவதற்கும், குறித்த இயந்திரங்களை நிறுவுவதற்கு இயலுமாகும் வகையில் வைத்தியசாலையில் நிலத்தடி அரணை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசிமருந்தைக் கொண்ட 6,000 குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை
இதயநோய் நிலைமை கொண்டுள்ள நோயாளிகளின் மரணத்தைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற ஊசிமருந்தான டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசிமருந்தைக் கொண்ட 6,000 குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக, 03 விலைமனுக்கள் கிடைத்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களுடன் குறைந்த விலைமனுதாரரான இலங்கையைச் சேர்ந்த M/s Lifecerll Interventions (Pvt) Ltd (Manufacturere – Gennova Biopharmaceuticals Limited, India) இற்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. மின்சாரக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் மற்றும் மீள்புதிப்பிக்கப்பட்ட வலுசக்தியை ஒன்றிணைத்தல் கருத்திட்டத்தின் கீழ் கருத்திட்ட ஆலோசகர்களின் பெறுகை
வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற பிரதேசங்களில் கேள்வி அதிகரித்துள்ளமையால், குறித்த நிறுவனத்தால் பேணப்பட்டு வந்த மின்சார விநியோக வலையமைப்பைப் பலப்படுத்தல் மற்றும் நவீனமயப்படுத்துவதற்காக பரிமாற்ற அபிவிருத்தி மற்றும் விநியோகக் கருத்திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக “மின்சாரக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் மற்றும் மீள்புதிப்பிக்கப்பட்ட வலுசக்தியை ஒன்றிணைத்தல் கருத்திட்டத்தின்” கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்தகருத்திட்டத்தின் கீழ் கீழ்க்காணும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.
• களனிப் பிரதேசத்தில் தேசிய மின்வலுக் கட்டமைப்பின் உப மின்நிலையமொன்றின் ஊடாக மின்சார சபை மின்விநியோகத்தை வழங்கல்
• களனி/நீர்கொழும்பு மற்றும் கோட்டை/நீர்கொழும்பு பிரதேசங்களில் லங்கா மின்சார தனியார் கம்பனியின் மின்னழுத்த வலையமைப்பை வலுப்படுத்துவதற்காக 33 கிலோவாற்று மின்சாரத்தை விநியோகத்தை அறிமுகப்படுத்தல்
• களனி மற்றும் கோட்டை, நுகேகொட பிரதேசங்களில் அடையாளங் காணப்பட்ட நிலத்தடி தந்தி வடங்களை வலையமைப்பாக மாற்றுதல்
• கோட்டை, நுகேகொட, மொரட்டுவ மற்றும் களுத்துறை கிளைப் பிரதேசங்களில் 11 கிலோவாற்று தன்னியக்க ஓட்டத் தொகுதியை மீள்கட்டமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
• கண்காணிப்புக் கட்டுப்பாடு மற்றும் தரவுக் கிரகித்தல் தொகுதி மற்றும் வலையமைப்பு தன்னியக்கத் தொகுதி போன்றவற்றை இயக்குதல்
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான தகைமை வாய்ந்த ஆலோசகர்களைத் தெரிவு செய்து பெற்றுக் கொள்வதற்கான பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள விதந்துரைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

9. 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2022 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தை இரத்துச் செய்தல் மற்றும் நிதி அறிக்கையிடல் ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்தல்
1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2021.05.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் ஆய்வு சபை மற்றும் அதற்குரிய ஏனைய தரப்பினங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், சட்டவரைஞரால் நிதி அறிக்கையிடல் ஒழுங்குபடுத்தல் அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதிய அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென சட்டவரைஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அமைச்சரவையின் உடன்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்பு சட்டம் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆவது அதிகாரம்) கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக கைவிடல் நீக்கப்பட்டதற்கு இணையாக குறித்த வாகனங்களின் இறக்குமதிகளுக்கு 30% இறக்குமதித் தீர்வை வரியை விதிப்பதற்கு 2024-12-09 திகதிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பின்வரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 2421/05இலக்க 2025-01-27 திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழான 01/2025 இலக்க அரசிறை பாதுகாப்பு கட்டளை
 2421/43இலக்க 2025-01-31 திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 235 அதிகாரத்தின் கீழான சுங்க கட்டளைச் சட்டத்தின்10(அ) பிரிவின் கீழ் விதிக்கப்படும் ஒழுங்குவிதி

12. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமனம் செய்தல்
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் பதவியில் சேவையாற்றிய திருமதி. டபிள்யூ.ஏ.எஸ்.சந்ரசேகர 2025-02-28 திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகவுள்ள உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றும் உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி. ஆர்.பி.எச். பர்னாந்து அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமனம் செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

13. தொழில் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமனம் செய்தல்
தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் பதவியில் தற்போது சேவையாற்றும் திரு. எச்.கே.கே.ஏ. ஜயசுந்தர தற்போது குறித்த திணைக்களத்தில் 23 ஆண்டு சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ளதனால் வேறு பதவியில் சேவையாற்றக்கூடிய வகையில் தொழில் ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, வேறு பொருத்தமான பதவிக்கு நியமனம் செய்யக்கூடிய வகையில் அவரை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு இணைப்பதற்கும், அதற்கமைய வெற்றிடமாகும் தொழில் ஆணையாளர் நாயகம் பதவிக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி.எச்.எம்.டி.என்.கே. பட்டலியத்தவை நியமிப்பதற்கும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

14. 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 156 பிரிவின் கீழான ஒழுங்குவிதி
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 156 (1) பிரிவுக்கு அமைய இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான விசாரணை ஆணைக்குழுவிடம் உசாவி மேலே சொல்லப்பட்ட சட்டத்தில் விதிக்கப்படும் விடயங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகளை உருவாக்குவதற்கு நீதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேற்குறித்த சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய பொருத்தமான அனைத்து நபர்களாலும் ஒழுங்குவிதிகள் மூலம் உத்தரவிடப்படக்கூடிய ஏதாவது மாதிரிப் படிவத்துக்கு அமைய “சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்” வெளியிடப்பட வேண்டும். “சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்” என்பதில் இலங்கைக்கு உள்ளே அல்லது வெளியே, நேரடியாக அல்லது பொருள்கோடல் செய்யப்படும் ஒழுங்குவிதிகள் மூலம் அதன் விபரங்கள் உத்தரவிடப்பட வேண்டிய சொத்துக்கள், பொறுப்புக்கள், செலவு மற்றும் வட்டிப் பணம் கருதப்படுகிறது.

அதற்கமைய 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள 2025 ஆண்டின் ஊழல் எதிர்ப்பு (சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனம்) ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் மேற்குறிப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


நன்றி...!
தினகரன்

Post a Comment

0 Comments