
உயிர்த்த ஞாயிறு தாக்குலுடன் தொடர்புடைய பல விடயங்களை தாம் அறிந்திருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் வெள்ளிக்கிழமை (7) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விடயங்களை
தாம் அறிந்திருப்பதாக அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்த விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தாம் வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு நேற்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.
அந்த அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அதனுடன் தொடர்புடைய பல தகவல்கள் தாம் அறிந்திருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்திருக்கிறார்.எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கும் என உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் தேரரின் இந்த அறிவிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையும்.அத்துடன் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே அரசாங்கம் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
ஏற்கனவே அவர் இந்த தாக்குதல் இடம் பெறுவதற்கு முன்னரும் நாட்டில் அசம்பாவிதமொன்று இடம்பெறவுள்ளதாக எச்சரித்திருந்தார்.தற்போது அவர் இந்த விசேட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள தலதா கண்காட்சியின் போது உயர் பாதுகாப்பை வழங்குமாறு கூறியுள்ளார். நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோன்று தற்போது மக்களுக்கு தேவையான சேவையை முன்னெடுத்துள்ள இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் காணப்படுமாயின் அது இந்த நாட்டில் மீண்டும் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும். அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட தேரரரை அழைத்து அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும்.அவரிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
0 Comments