
ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்; அதற்கான முழுமையான திட்டம் எம்மிடமுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா உயர்பீட உறுப்பினர் ராஸிக் அவர்களின் தலைமையில் காத்தான்குடி அல்-அக்ஸா சதுக்கத்தில் நேற்று (19) இடம்பெற்றபோதே இதனை குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
அவர் இதன்போது கருத்துத்தெரிவிக்கையில்,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் எதையெல்லாம் நாங்கள் பேசினோமோ அவற்றை எல்லாம் நிறைவேற்ற நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். எம்மால் முடிந்த சில வற்றை செய்திருக்கிறோம்.
காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பன்னிரெண்டு கிலோமீட்டர் வீதியை காபட் வீதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது இன்னம் இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும்.
அதேபோன்று, காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட அனைத்து வீதிகளையும் காபட் இடும் பணியினை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நிறைவு செய்வதற்கும் அனைத்தும் முயற்ச்சிகளையும் மேள்கொண்டிருக்கிறோம்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் காத்தான்குடி நகர சபையை வெல்வதற்கு எந்த சவாலும் எமக்கில்லை. பத்து வட்டாரங்களையும் மிக இலகுவாக வெல்வோம்.
எம்மோடு மேலும் சில கட்சிகள் இணைவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. காத்தான்குடி நகர சபையை அதிக பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு முழுமையான அதிகாரத்தை பெற்று ஆட்சியமைப்பதற்குரிய அனைத்து வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடி நகரம் மாற்றப்படும். அதற்கான அனைத்து திட்டங்களும் எம்மிடமுள்ளது மிக விரைவில் அதனை நிறைவேற்றி பிரபல்யமிக்க சுற்றுலா நகரமாக மாற்றப்படும் என தெரிவித்தார்.
இதன்போது, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச மத்திய குழு உறுப்பினர்கள், காத்தான்குடி நகர சபை வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.
0 Comments