Trending

6/recent/ticker-posts

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு தொடர்பில்...!



இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் பற்றி இரான் கூறுவது என்ன?

'ஓர் அற்புதமான இராணுவ வெற்றி'

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

"இந்த பயங்கரமான அழிவுகரமான தளங்களை அவர்கள் கட்டியெழுப்பும் போது எல்லோரும் பல ஆண்டுகளாக அந்தப் பெயர்களைக் கேட்டனர். இன்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றி என்று நான் உலகிற்கு தெரிவிக்க முடியும். இரானின் முக்கிய அணு செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் தெரிவித்தார்.

பட மூலாதாரம்,Reuters

இரானுக்கு டிரம்ப் மிரட்டல்

இரான் இப்போது சமாதானம் முன்வராவிட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் மிக அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

"அமைதி விரைவில் ஏற்படும் அல்லது கடந்த எட்டு நாட்களில் நாம் கண்டதை விட இரானுக்கு மிகப் பெரிய சோகம் ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"நினைவில் கொள்ளுங்கள், இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. இன்றிரவு அவற்றில் மிகவும் கடினமானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. ஆனால் அமைதி விரைவில் வரவில்லை என்றால், நாங்கள் துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் மற்ற இலக்குகளை நோக்கிச் செல்வோம்," என்று அவர் கூறினார்.

"இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு குழுவாக செயல்பட்டன"

இரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார்.

"இது நடக்க விடமாட்டேன், இது தொடராது என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்" என்று குறிப்பிட்ட அவர்,

"இஸ்ரேலுக்கு எதிரான இந்த பயங்கரமான அச்சுறுத்தலை" அழிக்க இஸ்ரேலுடன் ஒரு "குழுவாக" பணியாற்றியதாகக் கூறி, பெஞ்சமின் நெதன்யாகுவை வாழ்த்தினார்.

டிரம்ப் உரை சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது.

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்

முன்னதாக, "ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன," என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

இரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, அமெரிக்காவின் பி-2 ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க தீவுப் பகுதியான குவாமுக்கு முன்பே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகத்தை அதிகப்படுத்தியிருந்தது.

'ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது'

"ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது" என்ற ஒரு புலனாய்வு பயனரின் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபதிவு செய்துள்ளார்.

"இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம்" என்று அவர் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

"இரான் இப்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன்முழு ஒருங்கிணைப்பு - இஸ்ரேல்

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அமெரிக்காவுடன் "முழு ஒருங்கிணைப்பில்" இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய பொது ஊடகமான கானிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நன்றி...!
BBC-Tamil

Post a Comment

0 Comments