
அமெரிக்கா இஸ்ரேலுக்கு இராணுவ உதவி செய்ய தயாராகி வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான மோதலைத் தூண்டி, தனது ஆட்சியை நீடிக்க முயல்வதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், கடுமையாக விமர்சித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான மோதலைத் தூண்டி, தனது ஆட்சியை நீடிக்க முயல்வதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
‘தி டெய்லி ஷோ’ நிகழ்ச்சியில் வியாழக்கிழமை ஒளிபரப்பான பேட்டியில், கிளிண்டன் கூறுகையில்,
“நெதன்யாகு நீண்ட காலமாக ஈரானுடன் போர் தொடுக்க விரும்புகிறார். இதன் மூலம் அவர் தனது பதவியை என்றென்றும் தக்கவைக்க முடியும்.
கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் அவர் பதவியில் இருக்கிறார்,” என்றார்.
பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு அளிக்கப்படாமல் இருப்பது குறித்தும் கிளிண்டன் கவலை தெரிவித்தார்.
“நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு வழங்கும் எண்ணமே இல்லை. இப்போது பாலஸ்தீனர்கள் பிளவுபட்டு, நசுக்கப்பட்ட நிலையில், தங்களை ஒருங்கிணைத்து இலக்கை அடைய முடியாத நிலையில் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்த கிளிண்டன், அதேநேரம், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடவடிக்கைகளால் பாதுகாப்பற்ற பொதுமக்கள் உயிரிழப்பதை கடுமையாக எதிர்த்தார்.
“ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், தற்போது நடக்கும் இந்த தொடர்ச்சியான பொதுமக்கள் படுகொலைகள் தேவையற்றவை. அவர்கள் தற்காப்பற்றவர்கள், வாழ விரும்புபவர்கள்,” என்றார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இராணுவ மோதல் உருவாகும் அபாயம் நெருங்கி வரும் நிலையில், கிளிண்டனின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேற்காசியாவில் மோதல் தீவிரமடைந்தால், மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
0 Comments