மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவை தவிர இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
37 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்- கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப். 1987 ல் மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை கமல்ஹாசன் என் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. கமல் - மணிரத்னம் கூட்டணி எப்படி வெற்றிக் கூட்டணியோ அதேபோல் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியும் ரசிகர்களிடையே கொண்டாட்டப்படும் ஒரு கூட்டணி தான்.. ‘ரோஜா’ திரைப்படத்தில் தொடங்கிய இந்தக் கூட்டணி ‘தக் லைஃப்’ வரை தொடர்கிறது.
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தக் லைஃப்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தந்தை மகனிடையே நடைபெறும் கேங்ஸ்டர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தை காண குவிந்த கமல் மற்றும் சிம்பு ரசிகர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
0 Comments