
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சரியாக 1.20 மணிக்கு கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. 3000 அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.
தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் வானுயர கரும்புகை வெளியேறி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்த ஏர் இந்தியா விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் குடியிருப்புகள் நிறைந்த மேகானி நகர் என்னும் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விமான நிலையத்திலேயே கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, பயணிகளின் விவரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 90 மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து குறித்து குஜராத் முதலமைச்சருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
0 Comments