
"தேர்தல் ஆணையத்தை தனது மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கர்நாடகாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் சில ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறார். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும், பாஜகவின் மோசடியையும் காட்டுவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையமோ ராகுல் காந்தியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என மறுத்து வருகிறது. அதேநேரம் இந்தியா கூட்டணி கட்சிகள் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தை தனது மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் ஓட்டுகளை திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
எனது சகோதரரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான திரு. ராகுல்காந்தி, இந்த மோசடியை அம்பலப்படுத்தியிருக்கிறார். இன்று, ராகுல்காந்தி INDIA கூட்டணி எம்.பிக்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பேரணியாக செல்ல இருக்கிறார்.
* ஒவ்வொரு மாநிலத்திற்கும் இயந்திரம் படிக்கக்கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்,
* அரசியல் ரீதியாக இயக்கப்படும் நீக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மற்றும்
* நமது ஜனநாயகத்தின் இந்த நாசவேலை குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்.
திமுக இந்தப் போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments