வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்த அமைச்சர் விஜித்த ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்திட்டம், க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித்த ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.
0 Comments