Trending

6/recent/ticker-posts

Live Radio

ஏமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் தாக்குதல்...!



ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் இருப்பிடங்கள், பாதுகாப்பு அலுவலகங்கள் மற்றும் உளவுப் பிரிவு அலுவலகங்களைக் குறிவைத்து தாக்கியதில், 8 பேர் உயிரிழந்துடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கு மேலாகத் தொடரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்ற நிலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கு எதிராகப் பதிலடி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸுக்கு ஆதரவாக, அரபிக்கடல் மற்றும் செங்கடலில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். அத்துடன், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை (செப்டம்பர் 24, 2025), ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் ஒன்று, இஸ்ரேலின் செங்கடல் கடற்கரை நகரான எலியட்டைத் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர், அதில் 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் அரசு உடனடியாக எச்சரிக்கை விடுத்திருந்தது.



இந்நிலையில், எலியட் நகரத்தின் மீதான ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் வியாழக்கிழமை (செப்டம்பர் 25, 2025) ஏமன் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல் விமானப்படை, ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் இருப்பிடங்கள், பாதுகாப்பு அலுவலகங்கள் மற்றும் உளவுப் பிரிவு அலுவலகங்களைக் குறிவைத்து அதிரடியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துடன் பலர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஹவுத்திகளுடனான இந்த நேரடி மோதல் மத்திய கிழக்கின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Post a Comment

0 Comments