Trending

6/recent/ticker-posts

Live Radio

கொழும்பில் கடைசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று - பாகிஸ்ன் மற்றும் இலங்கை அணி களத்தில்...!!



கொழும்பில் இன்று நடைபெறவுள்ள கடைசி ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வெற்றிகொள்ளும் முயற்சியுடன் இலங்கை களம் இறங்கவுள்ளது.

இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய தினம் மழை பெய்யா விட்டால் இப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமரி அத்தபத்துவின் பிரியாவிடை உலகக் கிண்ணப் போட்டியாக இது அமையவுள்ளதால் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுக்க அவர் கடுமையாக முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிரேஷ்ட வீராங்கனைகளான இனோக்கா ரணவீர, உதேஷிக்கா ப்ரபோதனி ஆகியோருக்கும் இது பிரயாவிடை உலகக் கிண்ணப் போட்டியாக அமையவுள்ளது.

இந்த வருட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கைக்கு திருப்திகரமாக அமையவில்லை.

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் பங்களாதேஷுக்கு எதிராக மாத்திரமே இலங்கை வெற்றிபெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற அப் போட்டியில் மிகவும் இறுக்கமான 7 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.

அதன் இரண்டு போட்டிகளில் முடிவு கிடைக்காததுடன் மற்றைய 3 போட்டிகளில் தோல்விகளைத் தழுவியது.

மேலும் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ள இலங்கை, பாகிஸ்தானை வெற்றி இல்லாமல் நாடு திரும்பச் செய்யும் என கருதப்படுகிறது.

மறுபக்கத்தில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு 2 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.

எனவே இன்றைய போட்டியில் என்ன விலைகொடுத்தேனும் வெற்றிபெறுவதற்கு பாகிஸ்தான் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இரண்டு அணிகளும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 33 தடவைகள் சந்தித்துக்கொண்டுள்ளன. அவற்றில் 22 போட்டிகளில் இலங்கையும் 11 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றுள்ளன.

அணிகள்:

இலங்கை: விஷ்மி குணரட்ன, சமரி அத்தபத்து (தலைவி), ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, அனுஷ்கா சஞ்சிவனி, சுகந்திகா குமாரி, உதேஷிக்கா ப்ரபோதனி, மல்கி மதாரா, இனோக்கா ரணவீர.

பாகிஸ்தான்: முனீபா அலி, ஒமெய்மா சொஹெய்ல், சிட்ரா ஆமிக். ஆலியா ரியாஸ், நட்டாலியா பெர்வெய்ஸ், பாத்திமா சானா (தலைவி), சிட்ரா நவாஸ், ராமீன் ஷமிம், டயனா பெய்க், நஷ்ரா சாந்து, சாடியா இக்பால்.

Post a Comment

0 Comments