Trending

6/recent/ticker-posts

Live Radio

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்...!



ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

அந்தப் பதிலில், இந்தியாவின் எரிசக்தி கொள்கை வெளிப்புற அழுத்தத்தால் அல்ல, அதன் தேசிய மற்றும் நுகர்வோர் நலன்களால் வழிநடத்தப்படுகிறது என்று வெளிவிவகார அமைச்சு (MEA) தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளிவிகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு.

நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.

எங்கள் இறக்குமதிக் கொள்கைகள் முற்றிலும் இந்த நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட உலகளாவிய பங்காளர்களுடனான இந்தியாவின் ஈடுபாடு, தூய்மையான மற்றும் நிலையான எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பான எந்தவொரு முடிவு குறித்தும், அல்லது ட்ரம்ப் கூறியது போல், அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரதமர் மோடியின் “உறுதிமொழி” குறித்தும் நேரடியாக எந்தக் கருத்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு வொஷிங்டன் அண்மைய மாதங்களில் புது டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கை மொஸ்கோவின் பொருளாதார வளங்களைக் கட்டுப்படுத்தும் என்றும் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர நிர்பந்திக்கும் என்றும் வாதிடப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை குறைக்க புது டெல்லி முடிவு செய்தால், அது ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் வாடிக்கையாளராக மாறியுள்ள இந்தியாவிற்கு ஒரு பெரிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தைக் குறிக்கும்.

Post a Comment

0 Comments