Trending

6/recent/ticker-posts

Live Radio

மன்னாரில் புதிய காற்றாலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாது - முன்மொழிவுக்கு அங்கீகாரமா.? முழு விபரம்..!



மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் அங்கு புதிய காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற ரீதியில் மீளாய்வு செய்யப்பட்ட வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிக காற்று ஆற்றல் வளம் கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மொத்தம் மூன்று காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இவற்றில், ஒரு கருத்திட்டம் தம்பவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நடவடிக்கையாக 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏனைய இரண்டு கருத்திட்டங்களான, Windscape Mannar (Pvt) Ltd-இன் 20 மெகாவாட் திட்டம் எதிர்வரும் டிசம்பரிலும், Hayleys Fenton-இன் 50 மெகாவாட் திட்டம் 2026 டிசம்பரிலும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

எனினும், இந்தக் கருத்திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை இடைநிறுத்தும் ஒரு சூழல் நிலவியது.

இந்தநிலையில், பிரதேச மக்கள் முன்வைத்த சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை மன்னார் தீவு மக்களின் விருப்பத்துடன் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வலுசக்தி அமைச்சரால் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கமைய, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, மூன்று திட்டங்களுக்கு மேலதிகமாக வேறு காற்றாலை திட்டங்களை அங்கு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும், அவ்வாறு அமைப்பதாயின் அதற்கு பொருத்தமான மாற்று இடம் தெரிவு செய்யப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments