Trending

6/recent/ticker-posts

Live Radio

ஹக்கீம் அழைத்தார், நாம் சென்றோம் - ஏ.எல்.எம். அதாஉல்லா...!



ஹக்கீம் அழைத்தார், நாம் சென்றோம்: காப்பாற்றுமாறு கதறும் போது, கட்சி பேதம் பார்க்க முடியாது...!

ஆபத்தில் தவிப்போருக்கு உதவுவதை எழுந்தமானமாக நோக்காமல் மனிதாபினமாகப் பார்க்குமாறும் கட்டெறும்புகள் நிமிர்ந்து குதிரையின் கடிவாளத்தை தொட முடியாதெனவும் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் இணைந்து துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறித்து வினவியபோதே, அவர் இதனைக் கூறினார். இதுபற்றி மேலும் அவர் குறிப்பிடுகையில்; "சந்தர்ப்பவாதிகள் பூசும் அரசியல் சாயங்களையோ அல்லது விமர்சனங்களையோ பொருட்படுத்தப் போவதில்லை. இயற்கையின் சீற்றத்தால், எமது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய பேரழிவுகள் ஏற்பட்டிருந்தன.

சொந்தங்களை இழந்தோர்,சொத்துக்களை பறிகொடுத்தோர் மற்றும் ரத்த உறவுகளை இழந்தோரென நாடெங்கும் எழும்பியிருந்த அவலக்குரல்களும், ஒப்பாரிகளும் எமது நெஞ்சங்களை நெகிழச் செய்தன. இயற்கையின் சீற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட்டோர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உதவுவதுதான் மனிதாபிமானம். இதனால், மூதூருக்குச் சென்று துயர் துடைக்கும் பணிகளில் எமது கட்சி ஈடுபட்டது. எமது தொண்டர்களின் சேவை, மூழ்கித் தவிப்போரின் தொண்டைக்குழி வரைச் சென்று அவர்களை காப்பாற்றியது. கெலிஓயாவிலிருந்து அக்கரைப்பற்று நண்பர் ஒருவர் தொடர்புகொண்டு, அப்பகுதிக்கும் வருமாறு வேண்டினார்.

அங்கேயும் எமது தொண்டர்கள் முழு மூச்சாக நின்று களப்பணியாற்றினர். இதைக் கேள்வியுற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் எங்களை அழைத்தார். வெள்ளத்திலிருந்து காப்பாற்றுமாறு கதறும்போது, கட்சி பேதங்கள் பார்க்க முடியுமா? சாதி,மதம் மற்றும் சமூகம் பார்க்க முடியுமா? இவ்விடத்தில் கருணைக்குத்தான் முதலிடம்.

வாக்களிக்கவில்லை, எமது கட்சியில்லை என்பதற்காக சேற்றில் புதையட்டும் வெள்ளத்தில் மூழ்கட்டும் மண்சரிவில் புதைந்து அழிந்துபோகட்டும் என்று சந்தோஷப்பட முடியாது. இந்த உயரிய நோக்கில்தான் எமது கட்சியின் சேவைகள் இருந்தன. எல்லாவற்றையும் எழுந்தமானமாக நோக்காமல், யாதார்த்தமாக நோக்குமாறு சில்லறை விமர்சகர்களை கேட்டுக்கொள்கிறேன். அரசியலிலுள்ள சகல கட்டங்களையும் கடந்து வந்தவர்கள் நாங்கள், கட்டெறும்புகள் உயர்ந்து குதிரையின் கடிவாளத்தை தொட முடியாது" என்றார்

"ஏ.ஜீ.எம். தௌபீக்"

Post a Comment

0 Comments