
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுடன் தொடர்புடைய உள்ளூர் கப்பல் நிறுவனத்தின் ஏழு பிரதிநிதிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிஹார மஹாராச்சி நேற்று (ஜனவரி 14) வெளிநாட்டு பயணத் தடையை விதித்தார்.
கப்பலின் மின்னஞ்சல் முறைமை (Email System) நீக்கப்பட்டமை மற்றும் கப்பலில் எவ்வித ஆபத்தும் இல்லை எனக் கூறி, துறைமுக அதிகாரியை (Harbour Master) திசைதிருப்பி கப்பல் நுழைவு அனுமதியைப் பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், இந்த விசாரணை பெருமளவு நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதித்ததுடன், இது தொடர்பான விசாரணை முன்னேற்ற அறிக்கையை ஏப்ரல் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.



0 Comments