Trending

6/recent/ticker-posts

Live Radio

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!



இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுவளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை நேற்று (21) இரவு 8:30 மணி நிலவரப்படி நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ‘சிவப்பு நிற’ (நிலை 3) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

கண்டி மாவட்டம்: யட்டிநுவர, தொலுவ, உடுதும்பர மற்றும் கங்கா இஹல கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் மாவனல்லை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, லக்கல பல்லேகம, வில்கமுவ மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.

இதேவேளை, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை (Amber Level) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும், உள்ளூர் அதிகாரிகளினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments