Trending

6/recent/ticker-posts

Live Radio

தனியார் பேருந்து சேவைகள் 50 சதவீதம் குறையும் அபாயம்...!


இலங்கை முழுவதும் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சீரற்ற தன்மை காரணமாக, பொது போக்குவரத்து சேவை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, முறையான எரிபொருள் ஒதுக்கீட்டு (Quota) வழிமுறை இல்லாததால், பேருந்து உரிமையாளர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில இலங்கை போக்குவரத்துச் சபை சாலைகளில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும், பல இடங்களில் இருப்பு இல்லாததால் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெறும் கையுடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீடு அடிப்படையிலான வாராந்த 60 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு, ஒரு பேருந்தின் இயல்பான இயக்கத்திற்கு போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.

மேலும், பகல் நேரங்களில் எரிபொருள் நிரப்புமாறு அறிவுறுத்தப்படுவதால், திட்டமிடப்பட்ட நேர அட்டவணையின்படி பேருந்துகளை இயக்க முடியாமல் போவதுடன் சேவையின் வினைத்திறனும் குறைவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினருடன் இது குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை.

சுமார் 1,700 நீண்ட தூர பேருந்துகளுக்கு ஒதுக்கீட்டு முறை அறிவிக்கப்பட்டாலும், அதன் அமுலாக்கம் இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளது. தற்போதைய எரிபொருள் கையிருப்பு தீர்ந்து வருவதால், இந்த நிலை தொடர்ந்தால் வரும் நாட்களில் பேருந்து சேவைகள் 50 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து, நம்பகமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments