
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் சற்று தணிந்திருந்தாலும், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சுமுகமற்ற சூழலே நிலவி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “அடுத்த இலக்கு வடகொரியா தான்” என குறிப்பிட்டதைத் தொடர்ந்து, வடகொரியா தனது இராணுவ கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, புதிய அதிநவீன ரொக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட முக்கிய ஆயுத சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதுடன், இந்த சோதனைகளை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா அண்மையில் ‘சோஹியோன்’ (Sohyon) என்ற 5,000 தொன் எடையுள்ள அதிநவீன போர்க்கப்பலைத் தனது கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது. இது வடகொரிய கடற்படையின் தாக்குதல் திறனைப் பல மடங்கு அதிகரிக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆயுத சோதனைகளை நேரில் பார்வையிட்ட பின்னர், அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கருத்து வெளியிட்டுள்ளார்.
“எங்களது நீண்ட தூரத் தாக்குதல் திறன் கொண்ட ஆயுதங்கள் அனைத்தும் அதிநவீனமாக மேம்படுத்தப்பட்டவையாக மாற்றப்பட்டிருப்பதை விரைவில் எங்களின் எதிரிகள் அறியச் செய்வோம்!”
என கிம் ஜாங் உன் மிகவும் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார். வடகொரியாவின் இந்த தொடர்ச்சியான ஆயுத சோதனைகள் மற்றும் அதிரடி இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில் மீண்டும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.



0 Comments