
நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதுக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, முன்னணி பல் வைத்திய நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள் எனப் பலரும் கலந்து கொண்டதோடு மாணவர்கள், சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்கள் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு புலமைப்பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டன.
பிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். பொதுச் சுகாதாரம் என்பது வெறுமனே மருத்துவமனை சிகிச்சையை மாத்திரம் சார்ந்தது அல்ல. அது நல்ல உடல்நலம் மற்றும் தடுப்பு சார்ந்த வாழ்க்கைமுறை தேர்வுகளில் இருந்தே ஆரம்பமாகிறது.
வாய்வழி சுகாதாரம் என்பது இந்தப் பயணத்தின் மிக முக்கியமானதொரு பகுதியாகும். ஆரோக்கியமான புன்னகை என்பது பலமான பற்கள் இருப்பது மட்டுமல்ல, அது சிறந்த ஊட்டச்சத்துடனும், ஒரு குழந்தையின் கற்றல் திறனுடனும், ஒரு வளர்ந்தோரின் உழைப்புத் திறனுடனும், ஒவ்வொரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் கௌரவம் ஆகியவற்றுடனும் நேரடியாகத் தொடர்புடையதாகும்.
உலகளாவிய தரவுகளின்படி, உலகளவில் சுமார் 350 கோடி மக்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை குழந்தைகளிடையே பல் சொத்தை, பெரியவர்களிடையே பரவலாகக் காணப்படும் ஈறு நோய் மற்றும் புகையிலை பயன்பாடு, வெற்றிலை பாக்கு, உபயோகம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புடைய, குறிப்பாக ஆண்களிடையே அதிக அளவில் காணப்படும் வாய்வழி புற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னும் இருந்து வருகின்றன.
தொற்றா நோய்களின் தேசிய சுமையைக் குறைப்பதுக்கு ஏதுவாக தடுப்பு சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது. பாடசாலை பல் மருத்துவ சேவைகள் மற்றும் சமூக ரீதியிலான சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட வெற்றிகரமான முன்முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
மருத்துவ சமூகமானது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கவும், உள்நாட்டு ஆராய்ச்சித் திறன்களைப் பலப்படுத்தவும், நாட்டின் பொது சுகாதார அமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளைத் தமக்கேற்ப மாற்றியமைக்க முன்வர வேண்டும்.
மேலும், பல் மருத்துவத் துறையில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்து வருவதை நான் வரவேற்கின்றேன். இத்துறையில் அவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைப்பதுடன், நிபுணத்துவ பயிற்சி, ஆராய்ச்சி, தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை எடுக்கும் முக்கிய பதவிகளிலும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.



0 Comments