Trending

6/recent/ticker-posts

Live Radio

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை ; மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு...!!



மேற்காசிய பிராந்தியத்தில் தொடரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் 1%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.

இன்று (28) திங்கட்கிழமை ஆசிய வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில், பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றிற்கு 1.32 அமெரிக்க டொலராக அதிகரித்து 105.64 அமெரிக்க டொலராகப் பதிவானது. அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் 70 சென்ட்கள் அதிகரித்து பீப்பாய் ஒன்று 93.11 அமெரிக்க டொலராக விற்பனையானது.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பேரவைக் கூட்டத்தில், 7 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து தடைகளை நீக்குவதற்கான அமைதித் திட்டத்தை கட்டார் மத்தியஸ்தர்கள் மூலமாக ஈரான் அமெரிக்காவிற்கு அனுப்பியது. எனினும், "ஈரான் போரில் பலவீனமடைந்து வருவதாகவும், முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" எனவும் கூறி ட்ரம்ப் இத்திட்டத்தை நிராகரித்துள்ளார்.

சவூதி அரேபியாவை இலக்கு வைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய 2 பொலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2 ட்ரோன்களை சவூதி பாதுகாப்புப் படைகள் வழிமறித்து அழித்துள்ளன. இது பிராந்திய எண்ணெய் விநியோகப் பாதைக்கு மீண்டும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளதால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த டீசல் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதிக்கக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பியச் சந்தைகளில் எரிபொருள் பற்றாக்குறை கவலையை அதிகரித்துள்ளது.

மேற்காசியாவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளர்களான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் மசகு எண்ணெய் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் நாளைக்கு 12.8 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது.

செங்கடல் துறைமுகமான யான்புவில் ஏற்பட்ட தாக்குதல்களையடுத்து, சவூதி அரேபியா தனது ஏற்றுமதிகளை கிழக்கிலுள்ள 'ராஸ் தனுரா' துறைமுகத்திற்கு மாற்றியதால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அதிரடி முடிவால் ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படுவது மேலும் தாமதமாகும் என்பதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரிக்கும் எனக் சந்தை பகுப்பாய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments