Trending

6/recent/ticker-posts

Live Radio

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதே எமது அபிவிருத்திப் பாதை - ஜனாதிபதி...!



கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்துச் செல்வது அரசாங்கத்தின் அபிவிருத்திப் பாதை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கிராமங்களுக்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளையும் தேவையான வசதிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர் சேவையின் IIIஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (08) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் சிறந்த வீதி மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளை உருவாக்குவதுடன், கிராம மக்களுக்கான அரச சேவைகளை விரைவாகவும் இலகுவாகவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு இரண்டு மாவட்டங்களில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கிராம உத்தியோகத்தர்கள் மக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் அரச அதிகாரிகள் என்பதால், அரச சேவைகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்வதில் அவர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரச சேவையை வலுப்படுத்துவதுடன், அதன் செயல்திறனை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை மூன்று கட்டங்களாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், 2027ஆம் ஆண்டில் சம்பள உயர்வுக்காக 330 பில்லியன் ரூபாய் மேலதிக செலவு ஏற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலகக் கொடுப்பனவு 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், சீருடைக் கொடுப்பனவு 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், எழுதுபொருள் கொடுப்பனவு 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அரச சேவையை அரசியல்மயமாக்காமல், மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கக்கூடிய வலுவான அரச சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்த அவர், புதிதாக நியமனம் பெறும் கிராம உத்தியோகத்தர்கள் அந்த மாற்றத்தை கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 28 பேருக்கு ஜனாதிபதியினால் அடையாள ரீதியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments