கலகத்தலைவன் திரைப்படம் கார்ப்பரேட்களுக்கு எதிரான கதையல்ல, கார்ப்பரேட் அத்துமீறல்களுக்கான கதை என்று அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத்தலைவன் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நேற்று காட்சியளிக்கப்பட்டது.
திரைப்படத்தை பார்ப்பதற்கு நடிகர்கள் அருண் விஜய், கலையரசன், மனோபாலா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கலகத்தலைவன் படத்தின் வில்லன் ஆரவ் உள்ளிட்டோர் சென்றனர்.
கலகத் தலைவன் திரைப்படத்தை பார்த்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “கலகத்தலைவன் படம் பார்த்து மிரண்டு போய் வந்துள்ளேன். உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்திலே இதுதான் பெஸ்ட் படம். வில்லன் கதாபாத்திரத்தில் ஆரவ் சிறப்பாக நடித்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது, கண்டிப்பாக திரைப்படம் மக்களுக்கு பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த திண்டுக்கல் லியோனி, “கலகத்தலைவன் படத்தை மகிழ் திருமேனி மிகச் சிறப்பாக எடுத்துள்ளார். புதுமையான ஒரு படைப்பு இது. படத்தில் கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது. இந்த படத்தோட வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக ஆரவ். பாட்ஷா படத்தில் ரகுவரன் எப்படி ரஜினிக்கு வில்லனாக நடித்தாரோ அதுபோல இந்த படத்தில் ஆரவ் நடித்துள்ளார்.
உதயநிதிக்கு இது ஒரு புதிய பரிமாணம், உதயநிதிக்காகவே செதுக்கப்பட்ட ஒரு படம் இது. பெண்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும், உதயநிதிக்கு ஏற்கனவே பெண்கள் ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில், இந்த படத்தை பார்த்த பின்பு இன்னும் அதிகமான பெண் ரசிகர்கள் வந்து விடுவார்கள்” என்று கூறினார்.
பின்னர் பேட்டி அளித்த நடிகர் அருண் விஜய், “கதை களமே மிக அழகாய் இருந்தது. ரசிகர்கள் இந்த படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள். உதய் பிரதருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் பின்னணி இசை மிக அருமையாக உள்ளது. கலகத்தலைவன் படத்தில் கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசி உள்ளார்கள்” என்றார்.
படம் குறித்து பேட்டியளித்த இயக்குனர் மகிழ், “படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. படம் பேசுவது கார்ப்பரேட்களுக்கு எதிரான கதையல்ல; கார்ப்பரேட் அத்துமீறல்களுக்கான கதை. கார்ப்பரேட்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிப்பது தவறு என கூறும் கதை, கார்ப்பரேட்களுக்கு கடிவாளம் போடக்கூடிய படம் இது” என்று தெரிவித்தார்.
மேலும் “தமிழ்நாடு முதலமைச்சர் படம் பார்த்து பாராட்டினார். இன்று (நேற்று) காலை 7.30 முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து, ஒவ்வொரு சீனாக பாராட்டினார். அவர் கதைக்குள் போய் பாராட்டுவார் என நான் நினைக்கவில்லை. திரைப்படத்தில் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை வைத்துள்ளேன். சென்சாரில் சில சீன்கள் தான் கட் செய்தார்கள், மற்றபடி நான் சொல்ல நினைத்ததை திரைப்படத்தில் கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
0 Comments