நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலம் வாங்கித் தருவதாக, பண மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வுபெறற காவல்துறை அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் உள்ளிட்டோர் மீது காமெடி நடிகர் சூரி போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சூரி அளித்த புகாரில் போலீஸார் முதலில் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
0 Comments