Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு நாடாளுமன்ற விவாதம்...!


தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் நடத்தக் கோருவதற்கு போதுமான ஆதாரம் உள்ளது என விசேட விசாரணைக்குழுவொன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இன்று அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது.

சிறில் ரமபோஷாவின் பிரத்தியே பண்ணைவீட்டில், 2020 ஆம் ஆண்டு நடந்த திருட்டுச் சம்பவமொன்றின்போது பெருந்தொகை பணம் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இத்திருட்டு குறித்து பொலிஸாருக்கு அறிவிக்காமல் மறைப்பதற்கு ஜனாதிபதி சிறில் ரமபோஷா முயன்றதாக எதிர்க்கட்சியினரால் குற்றம் சுமத்தப்பட்டது.

இத்திருட்டு தொடர்பான வீடியோவை ஆராய்ந்த நிபுணர்கள் 40 மில்லியன் டொலர்கள் வரையான பணம் திருடப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டனர்.

அத்துடன், ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுக்கு அப்பணம் எங்கிருந்து கிடைத்தது என கேள்விகள் எழுப்பப்பட்டன.

தான் தவறு எதையும் செய்யவில்லை எனக் கூறிய, சிறில் ரமபோஷா, 580,000 அமெரிக்க டொலர் பணம் ஷோபா குஷன்களின் அடியில் மறைத்து வைத்திருந்த நிலையில் திருடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த திருட்டுச் சம்பவம் மூடிமறைக்கப்பட்ட விடயம் தொடர்பாக விசாரிப்பதற்கு கடந்த செப்டெம்பர் மாதம் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை குற்றவியல் பிரேரணை மூலம் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கான விவாதத்தை நடத்தக் கோருவதற்கு போதுமான ஆதாரம் உள்ளதாக அந்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை வாக்கெடுப்பு நடத்துவதா என்பது குறி;த்து எதிர்வரும் 6 ஆம் திகதி தென்ஆபிரிக்க நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், ஆளும் தென் தென் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இன்று இரவு அவசரக் கட்சிக்கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

Post a Comment

0 Comments