அதிர்ஷ்டம் வாழ்க்கையில் ஒருமுறை கதவை தட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணுக்கு பட்டை தீட்டாத வைரக்கல் கிடைத்திருக்கிறது.
புருஷோத்தம்பூரில் வசிக்கும் ஜெண்டா பாய் என்ற பெண், தனது 6 குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலைக்கு செல்கிறார். அவர் விறகு எடுக்கச் சென்றபோது பட்டை தீட்டாத வைரக்கல் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்தப்பெண், வைரத்தை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.
4.39 கேரட் எடையுள்ள அந்த வைரக்கல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிருக்கும் என அதிகாரிகள் கூறினர். வைரத்தை ஏலம் விட முடிவு செய்துள்ள அதிகாரிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி மற்றும் வரி போக மீதமுள்ள தொகையை, நேர்மையாக வைரத்தை ஒப்படைத்த அந்தப் பெண்ணிடம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
காட்டில் இருந்து விறகுகளை சேகரித்து அதை விற்று, கூலி வேலை செய்து வரும் ஜெண்டா பாய், “ எனக்கு ஆறு குழந்தைகள். நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமண வயதை அடைந்துள்ளனர். ஏலத்தில் கிடைக்கும் பணத்தை எனது வீட்டின் கட்டுமானத்திற்கும் எனது மகள்களின் திருமணத்திற்கும் பயன்படுத்துவேன்" என்று கூறினார்.
0 Comments